இந்தியாவின் கதை : அத்தியாயம் 6 - முகமது கஜினி
இன்று பள்ளித் தேர்வில் முதல் வாழ்க்கையில் தோல்வி அடைந்தவர்கள் வரை, அனைவருக்கும் ஊக்கமாகச் சொல்லப்படுவது, முகமது கஜினியின் கதை. தோல்வி அடைந்தும் 17 முறை விடாமல் இந்தியா மீது படையெடுத்து வந்தான் என்பது கதை. உண்மையில் அவன் தோல்வி அடைந்ததால் மறுபடியும் இந்தியா மீதுப் படையெடுத்து வரவில்லை. இந்தியாவைக் கொள்ளை அடிக்கவே அத்தனை முறையும் படையெடுத்து வந்தான். ஆதலால், அநேகமாக அவனதுப் பதினேழு படையெடுப்புகளுமே வெற்றிதான். ஆப்கானிஸ்தானில் காபூலுக்குத் தெற்கே உள்ள நகரம் கஜினி. கி.பி. 977-ல் மத்திய ஆசியாவைச் சேர்ந்த ஒரு துருக்கியப் பிரபு கஜினியைத் தலைநகராக்கி ஆட்சி புரிந்தார். அவருடைய மகன்தான் முகமது கஜினி. கி.பி.998-ல் தந்தை இறந்த பிறகு, அரியணையில் அமர்ந்தபோது அவனுக்கு வயது இருபத்தேழு. இரண்டு ஆண்டுகள் கழித்துப் பிறந்தப் புதிய நூற்றாண்டுத் தங்களைப் பொறுத்தவரைப் பெரும் தலைவலியோடு ஆரம்பிக்கப் போகிறது என்பதை வட இந்திய அரசர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். கி. பி. 1000-ல் ஆரம்பித்தது, இந்தியாவை நோக்கிக் கஜினியின் முதல் படையெடுப்பு. ஏன் அப்போது எல்லோருக்குமே முத...