இந்தியாவின் கதை : ஔரங்கசீப்

                                       ஆக்ரா கோட்டையை வசப்படுத்தி தன் தந்தையை சிறைப்படுத்தி அரியணையில் அமர்ந்தார் ஔரங்கசீப். தனது வேண்டாத மகன் தற்போது வெற்றி வீரனாக மாறியதை தந்தையின் கண்ணில் பார்க்க ஆசை பட்டார் ஔரங்கசீப். ஆனால் பழைய பாதுஷா ஷாஜகானுக்கு தற்போதும் சில இராஜ விசுவாசிகள் இருப்பதாகவும், தந்தையை சந்திக்கச் சென்றால் தங்களை கொலை செய்ய திட்டம் வைத்திருப்பதாகவும் உளவு செய்தி வந்தது. அதனால் தன் தந்தையை சந்திக்கும் முடிவை தற்போதைக்கு தள்ளி வைத்தார்.

                              ஜோதிடர்கள் நல்ல நாள், நேரம் பார்த்து சொல்ல, ஜூலை 21, 1658 - இல் டெல்லி செங்கோட்டையில் பரந்து விரிந்த தோட்டத்தில் எளிமையான முறையில் "ஆலம்கீர்" என்ற பட்டத்துடன் முடி சூட்டிக்கொண்டார். விருந்து, கொண்டாட்டம், வான வேடிக்கை என நேரத்தை வீனடிக்காமல் அடுத்து என்ன செய்ய வேண்டும்? என்று களத்தில் இறங்கினார். அதுதான் ஔரங்கசீப். தன் அண்ணன்கள் மீது பார்வை திரும்பியது. தந்தையை எதிர்க்க கூட்டணி வைத்த முராத் திற்கு தான் ஏமாற்றப் பட்டது தற்போது தான் புரிந்தது. ஔரங்கசீப் பை கொல்ல திட்டம் தீட்டினார். ஆனால் சில நாட்கள் தள்ளிப் போட்டார். அதுவே அவருக்கு வினையானது. ஔரங்கசீப் முந்திக் கொண்டார். அரசு சார்பில் இராஜ குடும்பத்தினருக்கு விருந்து வைத்தார் பாதுஷா. முராத் திற்கு மதுப் பழக்கம் உண்டு. சூழ்நிலை அறியாமல் மதுவை அருந்த ஆரம்பித்தார். அளவுக்கு மீறி மது அருந்தினார். சில மணி நேரத்தில் அனைத்தும் ஒடுங்கிப் போனது. ஔரங்கசீப் வீரர்கள் தங்களது வேலையை எளிதாக முடித்தனர். இளவரசர் முராத் - உம் மயக்கத்திலேயே விண்ணுலகம் சென்றார்.

                            அடுத்ததாக தனது மற்றொரு அண்ணன் தாராவை கொல்ல ஒரு பெரிய படையுடன் துரத்திச் சென்றார்.  லாகூரில் பதுங்கியிருந்த தாரா, ஔரங்கசீப் படையுடன் வருவதை அறிந்து ஸட்லஸ் நதியை கடந்து முல்தான் பிரதேசத்துக்கு ஓட வேண்டி வந்தது. முன்னொரு சமயம் ஹூமாயூன் தப்பி, ஷெர்ஷா துரத்திய அதே பாதை. ஆனால் ஹூமாயூனுக்கு கிடைத்த அதிர்ஷ்டம் தாராவுக்கு கிடைக்கவில்லை. இதற்கிடையில் வங்காளத்தில் இருந்து டெல்லி நோக்கி ஷூஜா படையுடன் வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தி ஔரங்கசீப் இடம் போர்க்களத்தில் கிடைக்கிறது. தாரா வை துறத்த சில தளபதிகளிடம் பாதி படையும், டெல்லி கோட்டையைக் காக்க ஔரங்கசீப் உடன் பாதி படை என மொகாலயப் படை இரண்டாக பிரிந்தது. 

                                டெல்லி அருகே நடந்த போரில் ஔரங்கசீப்பிடம் தோற்ற ஷூஜா, மற்றும் சில வீரர்கள் காட்டிற்குள் சென்று மறைந்து விட்டனர்.  அவர்களை பல மாதங்களாக தேடியும் கிடைக்கவில்லை என்ற செய்தி மட்டுமே வந்தது. பின் அவர்கள் என்ன ஆனார்கள் என்ற செய்தி வரலாற்று ரீதியாக எதுவும் இல்லை. ஆனால் அராக்கான் காட்டில் உள்ள மனித மாமிசம் உண்ணும் பழங்குடியினர் அவர்களை வேட்டையாடி இருக்கலாம் என்ற ஒரு ஊகம் உண்டு. என்ன இருந்தாலும் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பது உறுதி செய்யப்படாததால் என்றாவது ஒரு நாள் ஷூஜா படையெடுத்து வரலாம் அல்லவா? என்று அடிக்கடி சகாக்கலோடு ஔரங்கசீப் பேசிக் கொள்வதுண்டு. 

                               இளவரசர் தாராவை துரத்திக் கொண்டு சென்ற மற்றொரு படையும், தாராவின் படையும் அவ்வ போது சண்டையிடுவதும், ஓடுவதும் துரத்துவதுமாகவே அவரது வாழ்க்கை இருந்தது. பிறகு எவ்வாறோ ஒரு வழியாக அகமதாபாத் வந்தடைந்தனர் தாரா மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் சில விஸ்வாசம் மிக்க வீரர்கள். ஆனால் அகமதாபாத் கவர்னர் ஔரங்கசீப் மீது கொண்டிருந்த பயத்தால் தாராவுக்கு உள்ளே வர அனுமதி தரவில்லை. குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லாமல் கோட்டை வாசலில் நின்று கதறினார் தாரா. ஔரங்கசீப் மீது இருந்த பயத்தால் தாராவுக்கு இந்தியாவில் வேறு எந்த கோட்டையின் கதவும் திறக்கப்படவில்லை. பாரசீகம் போய்விடலாம் என்று எண்ணிய தாரா குழுவினர் போலன் கணவாய் அருகே சற்று ஓய்வெடுத்தது. பாவம் தாரா.... அவரது வாழ்வில் மீண்டும் ஒரு பெரிய இடி விழுந்தது. அவரது மனைவி இத்தனை சோதனைகளிலும் உடன் இருந்த நாதிரா பேகத்திற்கு உடல்நிலை குன்றியது. திடீரென்று இறந்து போனார் நாதிரா. மார்பில் அடித்துக் கொண்டு கதறினார் தாரா. துக்கத்தில் என்ன செய்வதென்று புரியாமல் அங்கேயே இருந்தனர் சில நாட்களுக்கு. 

                          ஆனால் தன்னுடன் உள்ள மற்றவர்களுக்காக தாரா செயல்பட்டாக வேண்டும். போலன் கணவாய்க்குச் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள ஆப்கான் தலைவன் மாலிக் ஜீவான் உதவி செய்வான் என்று நம்பினார் தாரா. ஏனென்றால் முன்னொரு காலத்தில் மாலிக் செய்த தவறுக்கு அப்போதைய பாதுஷா ஷாஜகான் மரண தண்டனை விதித்தார். அதிலிருந்து மாலிக்கை அப்போதைய இளவரசர் தாரா தான் காப்பாற்றினார். அந்த நன்றிக்காக தற்போது தனக்கு உதவி செய்வான் என்று நம்பி அவனிடம் தஞ்சம் புகுந்தார். ஆனால் நன்றி மறந்த மாலிக், தாரா மற்றும் அவரது மகன் ஸிஃபிர் ஷூகோ வையும் சிறைபடுத்தி ஔரங்கசீப் இடம் ஒப்படைத்தான். 

                           கி.பி. 1659, ஆகஸ்டு 23 அன்று இளவரசர் தாராவும், அவரது மகன்களும் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு டெல்லிக்கு இழுத்து வரப்பட்டனர். இத்தனை ஆண்டுகளாக ஔரங்கசீப்பிற்கு தொல்லை கொடுத்தவர் இவர் தானே?? இவரை பாதுஷா என்ன செய்ய போகிறார் என்ற அச்சம் எல்லோரிடமும் இருந்தது. ஒரு யானையை சேற்றில் புரள வைத்து, அதன் மீது அமர வைத்து கிழிந்த ஆடைகளுடன், வாடிய முகத்துடன் இளவரசர் தாரா ஊர்வலமாக அனுப்பப் பட்டார். கூடவே வாலை உருவிய நிலையில் போர் வீரர்கள் அந்த யானையை சுற்றி ஒரு வியூகம் அமைத்து மக்கள் யாரும் இளவரசரை நெருங்க விடாமல் பார்த்துக் கொள்ள,  ஊர்வலம் நடைபெற்றது. தங்கள் இளவரசரை பட்டு ஆடைகளுடனும், இராஜ மரியாதையுடனும், மிடுக்கான தோற்றத்துடனும் பார்த்து பழகிய டெல்லி மக்கள் இந்த நிலையில் தங்கள் இளவரசரை பார்த்ததும் கதறி அழுதனர். ஆனாலும் அவர்களால் அந்த சூழ்நிலையில் இளவரசருக்கு உதவி செய்ய முடியவில்லை. இந்த பரிதாபம் இளவரசரை காட்டிக் கொடுத்த மாலிக் மீது கோபமாக திரும்பியது. டெல்லிக்கு வருகை தந்த மாலிக்கை மக்கள் கல்லால் அடித்தே கொன்றனர்.  இளவரசர் தாரா வக்கு மக்கள் முன் இருக்கும் செல்வாக்கை நினைத்து பாதுஷா ஔரங்கசீப் சற்று திகைத்துப் போனார் என்பதே உண்மை.  

                              அதனால் அவர் மீது "விசாரணை கமிஷன்" ஒன்றை நியமித்தார். மதத்துக்கும் நாட்டுக்கும் எதிராக அவர் செயல்பட்டார் என குற்றம் சாட்டி ஒரு புகார் பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் மரண தண்டனை வழங்குவதாக அறிவித்தார் பாதுஷா ஔரங்கசீப். ஆகஸ்டு 30 அன்று தாராவின் தலை தரையில் உருண்டது. தாராவின் தலை துண்டிக்கப்பட்டதை மக்களுக்கு அறிவிக்க, அதையும் ஒரு தட்டில் வைத்து ஊர்வலமாக அனுப்பினார். மக்கள் ஆர்ப்பாட்டத்தில் இறங்காமல் இருக்க இந்த ஊர்வலம் அவசியமாகிறது. தாரா உயிரோடு இருக்கும் வரை மக்கள் புரட்சியில் ஈடுபடுவார்கள் என்பதை ஔரங்கசீப் உணர்ந்திருந்தார். தாராவின் மூத்த மகன் சுலைமான் ஷூகோ, கார்வார்மலையில் உள்ள ஒரு சிற்றரசு கோட்டையில் ஒளிந்திருந்தார். அந்த இந்து அரசரின் மகன் அவர்களை ஔரங்கசீப்பிடம் காட்டிக் கொடுத்தார். அவருக்கு உடனடியாக மரண தண்டனை விதிக்க பாதுஷா விரும்பவில்லை. அதனால் சாப்பாட்டுக்கு முன் ஓபியம் விதைகளை சாப்பிட வைக்கும் ஒரு தண்டனையை வழங்கினார். இதனால் நாளாக நாளாக பார்வை மங்கி, உடல் சோர்ந்து, எழும்பும் தோலுமாக மாறி வெகு நாட்களுக்குப் பிறகு மரணம் நிகழும். அந்த காலத்திலேயே Slow poison இருந்துள்ளது போலும். இவ்வாறு எட்டு ஆண்டுகள் கஷ்டப் பட்ட இளவரசரை சில காவலாளிகள் இரக்கப் பட்டு விண்ணுலகம் அனுப்பி வைத்தனர்.

                            ஆக்ரா கோட்டையில் பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் ஷாஜகான். அவருக்கு மாற்று உடைகள் ஆபரணங்கள் என அனைத்து மறுக்கப்பட்டன. பிற்பாடு அங்கிருந்த காவலாளிகள் கூட ஷாஜகானை மரியாதை குறைவாக பேசினர். அவருக்கு பாலை வனச் சோலையாக இருந்தது அவரது மகள் ஜஹானாரா தான். இறுதி வரை தன் தந்தையை அரவனைப்போடு பார்த்துக் கொண்டார். சிறையில் இருந்த ஜன்னல் வழியாக தாஜ்மஹாலை பார்த்துக் கொண்டு இருப்பதிலேயே  பெரும் பொழுதை கழித்தார் ஷாஜகான். மீதி நேரத்தில் புனித குர்-ஆன் படித்தார். ஔரங்கசீப் அனுமதித்தது இவ்வளவே. 

                                 தன் எழுபத்து நாலாவது வயதில், ஜனவரி 22, 1666 அன்று ஷாஜகானின் மூச்சு நின்றது. அப்போது கூட தாஜ் மகாலை பார்த்துக் கொண்டே தான் அவர் இறந்திருந்தார். அவரது இறுதி ஆசை,  தாஜ்மஹாலை போலவே அச்சு எடுத்தது போல் யமுனை நதிக்கரையில் தனக்காக மற்றொரு கல்லறை கட்டப்பட வேண்டும் என்பதே.  ஆனால் சிக்கணத்தை கடைபிடித்த ஔரங்கசீப், அதெல்லாம் தேவையில்லை, இருக்கும் தாஜ்மஹாலிலேயே கல்லறை கட்ட இடம் இருக்கிறது என்று சொல்லி அங்கேயே ஷாஜகானின் உடலை புதைக்க ஆணையிட்டார். இன்றளவும் உலக புகழ் பெற்றுள்ள தாஜ்மஹால், அதுவும் ஒரே ஒரு தாஜ்மஹாலாக இருக்க ஔரங்கசீப் தான் காரணம் என்று சொல்லலாம்.

                               ஆக்ராவையும் டெல்லியையும் கைப்பற்றிய கையோடு ஜூலை 1658-ல் எளிமையாக முதல் முறையாக பதவி ஏற்று கொண்டார் ஔரங்கசீப். பின்னர் தன் சகோதர்கள் மற்றும் அவரது மகன்களை திட்டவட்டமாக விண்ணுலகம் அனுப்பி, ஓராண்டிற்குப் பின், ஆஸ்தான ஜோதிடர்கள் குறித்துக் கொடுத்த நல்ல நாளான ஜூன் 5, 1659-ல் மீண்டும் முடிசூட்டிக் கொண்டார். ஆனால் இந்த முறை "அப்துல் முஸாஃபர் முஹி உத்தீன் முகமத் ஔரங்கசீப் பகதூர் ஆலம்கீர் பாதுஷா அல்காஜி" என்னும் பட்டப் பெயருடன்.   

                      அக்பருக்கு இணையாக 50 ஆண்டுகள் கோலோச்சிய ஔரங்கசீப், வித்யாசமான பிரச்சனைக்குரிய சக்கரவர்த்தியாக கருதப்பட்டாலும் நட்சத்திர அந்தஸ்து பெரும் கடைசி மொகலாய பாதுஷா இவரே. அக்பரை போலவே அஞ்சா நெஞ்சம் படைத்த மாவீரராக திகழ்ந்தார். இருவரும் மகா புத்திசாலிகள். இவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை இவ்வளவுதான். மற்ற அனைத்திலும் அக்பரும் ஔரங்கசீப்பும் நேர் எதிர் துருவங்கள். இந்தியா ஒரு இஸ்லாமிய நாடு அல்ல, அதை அவ்வாறு மாற்றவும் முடியாது என்பதை அக்பர் மிக நன்றாக புரிந்து வைத்திருந்தார். ஆனால் ஔரங்கசீப் இந்தியாவை பிடிவாதத்துடன் ஒரு இஸ்லாம் நாடாகவே நடத்த பார்த்தார். ஆனால் பின்நாளில் இந்த முயற்சி தோல்வி அடைந்து மொகலாய சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

                        "ஆலம்கீர்" ஆக முடி சூட்டிக் கொண்டதை தொடர்ந்து இந்துக்களுக்கு எதிராக ஏராளமான சட்டங்களை கொண்டு வரத் தொடங்கினார். அக்பர் சிரமப்பட்டு சேகரித்து வைத்திருந்த இந்து மக்களின் பெருவாரியான ஆதரவை குழி தோண்டி புதைத்தார் ஔரங்கசீப். 1659-ம் ஆண்டிலேயே இந்துக்கள் புதிதாக எந்த கோயிலும் கட்டக்கூடாது என்று சட்டம் போட்டார் பாதுஷா. பழைய கோயில்களில் பராமரிப்பு மற்றும் புரணமைப்பு பனிகள் மேற்கொள்ள தடை விதிக்கப் பட்டது. பிறகு கடந்த 10 ஆண்டுகளுக்கும் கட்டப்பட்ட கோவில்கள் அனைத்தும் இடிக்கப்பட வேண்டும் என ஆணை பிறப்பிக்கப்பட்டது. 

                             அடுத்த கட்டமாக தீபாவளி, ஹோலி போன்ற இந்து பண்டிகைகள் அனைத்தும் கொண்டாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்து முறையில் பஞ்சாங்கம் தயாரிக்க தடை விதிக்கப்பட்டது. அரச சபைக்கு வருபவர்கள் இந்து முறைப்படி வணங்குவதற்கு தடை விதிக்கப்பட்டது. ஒரு காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்களுக்கு தங்கள் தெய்வங்களை வழிபட விதிக்கப்பட்டிருந்த ஜிஸியா என்னும் வரி மீண்டும் கொண்டுவரப்பட்டது. அக்பர் காலத்தில் இந்த வரி நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்துக்களுக்கு மட்டும் கஸ்டம்ஸ் வரி இருமடங்காக உயர்த்தப்பட்டது. முஸ்லிம்களைத் தவிர ராஜபுத்திரர்கள் மட்டுமே பல்லக்கில் வரவும் கத்தி வைத்துக் கொள்ளவும் அனுமதி தரப்பட்டது. ஆங்காங்கே இந்துக்களை மதம் மாற்றும் முயற்சி பெருமளவில் எடுக்கப்பட்டது. மதம் மாறுபவர்களுக்கு பெருமளவில் சலுகைகள் தரப்பட்டன.

               மனதளவில் ஔரங்கசீப் இந்துக்களை வெறுக்கவில்லை என்றும், ஒரு தீவிரமான, உண்மையான முஸ்லிம் என்ற முறையில் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு பாதுஷா கண்டிப்பான முறையில் ஆட்சி செய்ததன் விளைவே இவ்வளவும் என்று ஒரு சில வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ஏனென்றால் அவரே முழு முஸ்லிம் இல்லையே. அவருடைய தந்தையான ஷாஜகானின் தாய் ஒரு இந்து பெண்.  தாத்தா ஜஹாங்கீர் தாயும் ஒரு இந்து பெண் தான். இவ்வளவு ஏன்?? ஔரங்கசீப் இன் முக்கிய மனைவிகளில் ஒருவரான நவாப்பாய் (ஔரங்கசீப்புக்குப் பின் அரியணை ஏற போகும் பகதூர் ஷாவின் தாய்) காஷ்மீர் அரசரின் மகள், ஒரு இந்து பெண் தான்.

                       இதெல்லாம் இப்படி இருந்தாலும் மக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொண்டார் இந்த "ஆலம்கீர்" என்பதில் சந்தேகமில்லை. பிறகென்ன?? கிளர்ச்சிகள் வெடிக்கத் தொடங்கின. ஜிஸியா வரியை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகளும், பொது மக்களும் டெல்லியில் பேரணி நடத்தினர். ஒரு மணி நேரம் அவகாசம் தருகிறேன் அனைவரும் கலைந்து செல்லுங்கள் என்று பாதுஷா எச்சரித்தார். அதன் பிறகு பேரணியில் யானைகளை விட்டு பலரைக் கொன்றார். டெல்லிக்கு தென்மேற்கில் எழுபத்தைந்து மைல் தொலைவில் வசித்து வந்த சத்நாமிக்கள் என்ற இந்து பிரிவினர் பொறுமை இழந்து மொகலாயப் படையுடன் நேரடியாகவே மோதினர். இருமுறை வெற்றியும் கண்டனர். எதிர்பாராத விதமாக பிரமாதமாக சண்டையிட்ட சத்நாமிக்கள், டெல்லி நகரின் எல்லை வரை வந்து விட்டனர். மொட்டை தலையோடு துறவிகளாகவும், விவசாயத்திலும் ஈடுபட்டு வந்த இவர்களை சமாளிக்க மொகலாயப் படை திணறியது. பின்னர் பாதுஷா, முழு மொகலாயப் படையையும் அனுப்பி சத்நாமிக்களின் தலையை சீவ ஆணையிட்டார். இதே சமயம், மதுராவில் இருந்து ஜாட் இன மக்களும் டெல்லிக்கு எதிராக கொடி உயர்த்தினர்.

                        ஆக மொத்தத்தில், இந்திய சூழ்நிலைக்குச் சற்றும் ஒத்து வராத ஒரு சர்வாதிகாரத்தை தேவையில்லாமல் ஔரங்கசீப் கட்டவிழ்த்து விட, அவரை அவரே புதைக்குள் தள்ளியது போல் ஆகியது. அக்பர் காலத்தில் இருந்து உறையில் போட்டிருந்த வாட்களை சீக்கியர்களும் ராஜபுத்திரர்களும் எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. இதெல்லாம் போதாது என்று மராட்டியத்திலிருந்து சிவாஜி என்னும் இளைஞனின் தலைமையில் வரும் படை முகலாய சாம்ராஜ்யத்திற்கு பெரும் தலைவலியாக அமைந்தது. 

                                  மராட்டியம் என்பது மலைகள் சூழப்பட்ட ஒரு மாநிலம். இங்கு விவசாயத்திற்கான நிலம் மிகவும் குறைவு. அதனால் மக்கள் வாழ்வாதாரத்திற்கு மிகக் கடுமையாக உழைக்க வேண்டி இருந்தது. உழைப்புடன் வீரமும் தன்மானமும் மிக்க  மக்களாக மராட்டியர்கள் இருந்தனர். முகலாய ஆட்சியில் பாபர் முதல் ஷாஜகான் ஆட்சி வரை அமைதியாக இருந்த இந்துக்கள் மற்றும் ராஜபுத்திரர்களை அவுரங்கசீப் ஆட்சிக்கு வந்தவுடன் மிகவும் கடுமையான இன்னல்களுக்கு ஆளாக்கினார். அதனால் மக்கள் அனைவரும் அனலாக கொதித்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு தேவைப்பட்டது எல்லாம் அனைவரையும் ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்ல ஒரு தலைவன் மட்டுமே. அந்த தேவையை சிவாஜி எனும் இளைஞன் கச்சிதமாக நிறைவேற்றினார்.

                                    மேவார் ராஜபுத்திர வம்சத்தில் வந்த ஷாஜி போன்ஸ்லேக்கும் விஜயநகர யாதவர்கள் வம்சத்தில் வந்த ஜீஜா பாய்க்கும் 1630 இல் பிறந்தவர் தான் இந்த சிவாஜி. சிவாஜி குழந்தையாக இருந்த போது அவரது தந்தை குடும்பத்தை கைவிட்டு வேறொரு திருமணம் செய்து கொண்டு சென்று விட்டார். இருப்பினும் மனம் தளராது அவரது தாய் சிவாஜியை மிக நன்றாக வளர்த்தார். சிவாஜியின் இளம் வயதில் தாதாஜி கோண்ட் தேவ் எனும் பிராமணர் அவருக்கு குருவாகவும் காப்பாளராகவும் இருந்து கல்வியறிவை போதித்தார். அப்பொழுதே மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழ்ந்து வந்த மாவள்ளி மலைவாசிகளுடன் நெருக்கமான பழக்கம் கொண்டிருந்தார் சிவாஜி. அவர்கள் மூலம் போர்க்கலைகளை கற்றுக் கொண்டார். யாருக்கும் தெரியாத பல போர் தந்திரங்கள் சிறு வயதிலேயே சிவாஜி கற்றுக் கொண்டிருந்தார்.

                           யாரிடமும் சொல்லாமல் திடீரென்று தனது 17 வது வயதிலேயே ஒரு சிறிய குதிரை படையை திரட்டி கொண்டு தன் இருப்பிடத்திற்கு அருகில் இருந்த தோர்னா எனும் கோட்டையை கைப்பற்றிக் கொண்டார் சிவாஜி. தொடர்ந்து மலைப்பகுதிகளில் இருந்த பல கோட்டைகளை லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும், ராணுவ நடவடிக்கை மூலமாகவும் கைப்பற்றிக் கொண்டே இருந்தார் சிவாஜி. இது பற்றி டெல்லிக்கு செய்தி சென்றபோது, ஔவுரங்கசீப் யாரோ கொள்ளைக்காரர்கள் என்று பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் ஒரு சிறிய படையை மட்டும் அனுப்பி வைத்தார். சிவாஜியும் பயப்படுவது போல் நடித்து பின்வாங்கி சில காலம் அமைதியாக வாழ்ந்து வந்தார். இருப்பினும் அக்காலத்தை அவர் வீணடிக்கவில்லை தன் கைவசம் இருந்த கோட்டைகளை பலப்படுத்துவது, மராட்டிய இளைஞர்களை ஒன்று திரட்டுவது போன்ற பணிகளில் இறங்கினார்.

                             பிறகு தனக்கு ஒத்துப் போகாத ஜாவ்லி ஜமீன் எனும் குறு நிலத்தை ஆட்சி செய்து வந்த சந்திரராவ் மோரே எனும் மன்னரை தன் ஒரு சில வீரர்களை அனுப்பி நயவஞ்சகமாக கொன்று, அந்த குறு நிலத்தையும் கையகப் படுத்தினார் சிவாஜி. இவர் பெரும் சக்தியாக வளர்ந்து வருவது ஔரங்கசீப் பை விட பீஜய்ப்பூர் சுல்தானுக்கு நன்றாக புரிந்து இருந்தது. அதனால் சிவாஜியை கொல்ல அப்சல்கான் எனும் தளபதியின் கீழ் ஒரு பெரும்படை அனுப்பப்பட்டது. அப்சல் கான் படையும் சிவாஜியின் படையும் போருக்கு தயாராகி கொண்டிருந்த நேரத்தில், அப்சல் கான் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த சிவாஜியை அழைத்தார். ஆனால் தன்னை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டு இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்து கொண்டார் சிவாஜி. அதனால் "தகுந்த முன்னேற்பாடுடன்" அமைதிப் பேச்சு வார்த்தைக்கு சென்றார். அப்சல் கான் சிவாஜியை கொல்ல மேற்கொண்ட முயற்சியை சிவாஜி முறியடித்தார். ஆனால் பதிலுக்கு சிவாஜி எடுத்த முயற்சியை அப்சல் காணல் தடுக்க முடியவில்லை. அப்சல் கான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதன் பிறகு போர் ஆரம்பமானது. வழக்கம் போல சிவாஜியின் படை வெளுத்து வாங்கியது. தலைவன் இல்லாத படை தோற்று ஓடியது. நல்ல எண்ணத்திலேயே அப்சல் கான் பேச வந்தார், ஆனால் சிவாஜி தான் அவரை கொன்று விட்டார் என்று மற்றொரு கருத்தும் வரலாற்றில் உள்ளது. எது எப்படியோ சிவாஜி அப்சல் கானை கொன்றது உண்மை.

                          இத்தனை விஷயங்களையும் கேட்ட பிறகு ஔரங்கசீப் விழித்துக் கொண்டார். சிவாஜியின் அட்டகாசத்தை ஒடுக்க ஷாயிஸ்தாகான் எனும் மிகவும் அனுபவம் வாய்ந்த தளபதியை தட்சிணப் பிரதேசத்திற்கு கவர்னராக ஒரு பெரும்படையுடன் அனுப்பி வைத்தார் பாதுஷா. புனே நகருக்குள் வெற்றிகரமாக நுழைந்த மொகலாயப்படை அங்கிருந்து மராட்டிய படையை விரட்டி அடித்தது. தற்போது சிவாஜிக்கு பீஜய்ப்பூரின் ஆதரவு தேவைப்பட்டது. ஆதலால் இருவரும் சமாதான உடன்படிக்கை மேற்கொண்டனர். மொகலாயர்களிடம் அச்சம் கொண்டிருந்த ஷையா பிரிவு முஸ்லிம் ராஜ்யமான பீஜய்பூருக்கு சிவாஜி தேவைப்பட்டது வேறு விஷயம். இதைத்தொடர்ந்து தன் முழு பலத்தையும் மொகலாயர்கள் மீது காட்ட ஆரம்பித்தார் சிவாஜி. 

                         1663 - ஏப்ரல் 15 அன்று சிவாஜி எடுத்த நடவடிக்கை, இந்தியா முழுவதும் மராட்டிய படையை பற்றி எடுத்துரைத்தது. பூனே கோட்டைக்குள் மொகலாய தளபதி பலத்த பாதுகாப்புடன் தங்கி இருந்தார். நடு இரவில் கோட்டைக்குள் நுழைந்த மராட்டிய படையினர், பல மெய்க்காவலர்களை கொன்று, கவர்னரின் மகனையும் கொன்றனர். மொகலாயத் தளபதியின் கைக் கட்ட விரலை வெட்டி எடுத்துச் சென்றனர். இது டெல்லி பாதுஷாவுக்கு ஏதோ செய்தி சொல்வதாய் அமைந்தது. எட்டு மாதங்கள் கழிந்தன. திடீரென்று மராட்டிய படை, மொகலாய ஆளுகைக்கு உட்பட்ட மிக முக்கிய துறைமுகங்களில் ஒன்றான சூரத் நகரை முற்றுகையிட்டு தாக்கியது. சூரத் நகரை, சிவாஜியின் படையினர் கைப்பற்றிக் கொண்டனர். டெல்லி ஆதிக்கத்தில் இருக்கும் ஒரு முக்கிய நகரை மராட்டிய படை கைப்பற்றிய செய்தி நாடு முழுவதும் பரவியது. சிவாஜி விரும்பியதும் இதுவே. தன்னைப் பற்றிய பயம் மொகலாயர்களுக்கு எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். 

                       எத்தனையோ தேர்ந்த எதிரிகளை சமாளித்து வெற்றி பெற்றவர் ஔவுரங்கசீப். இந்த மராட்டிய படையை பார்த்து அவர் பயந்து விடுவாரா என்ன?? மராட்டிய புலியை பிடிக்க ராஜதந்திரத்திலும் போர் தந்திரத்திலும் அனுபவம் வாய்ந்த ஜெய்சிங் என்ற தளபதியை அனுப்பினார் பாதுஷா. முகலாய படையின் பிரதம சேனாதிபதியான இந்த ராஜபுத்திர வீரர் எச்சரிக்கையோடும் கவனத்தோடும் வகுத்த வியூகம் வெற்றிகரமாக செயல்பட்டது. சிவாஜியின் புரந்தர் கோட்டையை முற்றுகையிட்டு கைப்பற்றினார் ஜெய்சிங். டெல்லி படையின் மற்றொரு பகுதி ஆங்காங்கே பாதைகளை மறித்து போர் புரிந்து சிவாஜியின் நிர்வாகமே இயங்க முடியாமல் செய்தன. 1665 ஜூன் 22 அன்று ஜெய்சிங்கும் சிவாஜி யும் அமைதிப் பேச்சு வார்த்தை நடத்தினர். இறுதியாக புரந்தர் ஒப்பந்தம் கையெழுத்து ஆகியது. இதன்படி சிவாஜி தன்னுடைய 23 கோட்டைகளை டெல்லி பாதுஷாவுக்கு விட்டுக் கொடுக்க நேர்ந்தது. ஔரங்கசீப்புடன் சிவாஜி நட்புணர்வுடன் செல்ல வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினார் ஜெய்சிங். டெல்லியில் வந்து பாதுஷாவை சந்திக்குமாறும் அங்கு தங்கள் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் நான் உத்தரவாதம் அளிக்கிறேன் என்று ஜெய் சிங் உறுதியளித்தார். சிவாஜியும் இதற்கு ஒப்புக்கொண்டார். தன்னுடைய எதிரியையும் அவரின் இடத்தையும் உண்மையான பலத்தையும் நேரில் காண சிவாஜி ஆசைப்பட்டு இருக்கலாம். தன் 9 வயது மகனான சாம்பாஜியுடன் டெல்லி கிளம்பினார் சிவாஜி. தற்செயலாக சிவாஜி ஆக்ரா கோட்டைக்கு சென்ற நாளன்று பாதுஷாவின் பிறந்தநாள். அதனால் பாதுஷாவை பார்க்க ஏராளமான மக்கள், அவை பெரியவர்கள் சிற்றரசர்கள், வெளிநாட்டு பிரதிநிதிகள் என அரண்மனையே நிறைந்திருந்தது. இதற்கு நடுவே சிவாஜி ஒரு ஓரமாக நிற்கவைக்கப்பட்டார். வெகு நேரம் ஆகியும் அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. அதனால் கோபமும் மன உளைச்சலுக்கும் ஆளான சிவாஜி, அனைவரது முன்பும் என்னை கொல்ல வேண்டும் என்றால் இங்கேயே கொள்ளுங்கள் என்று வீர வசனம் பேசிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். இதை அறிந்த பாதுஷா எந்த உணர்ச்சியும் வெளிப்படுத்தாமல் அமைதியாக இருந்தார். ஆனால் கூட இருந்த அவை பெரியவர்கள், அரச சபையில் சிவாஜி நடந்து கொண்டது அரசரை அவமதிக்கும் செயல் என்றும் இவரை இப்போது விட்டால் சபையில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பது போல் ஆகிவிடும். அதனால் சிவாஜியை விடக் கூடாது என்று வலியுறுத்தினர். அதன்பிறகே பாதுஷாவும் கட்டளையிட, சிவாஜியை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதுஷா நினைத்திருந்தால் சிவாஜியின் தலையை அப்போதே சீவ ஆணையிட்டு இருக்க முடியும். ஆனால் பாதுஷாவை பொறுத்தவரை எல்லாம் விசாரணை படி, சட்டத்தின் படியே நடக்க வேண்டும். அதனால் தான் கைது செய்ய மட்டுமே ஆணையிட்டார். ஆனால் இந்த சட்டம், விசாரணை, விதிமுறை எல்லாம் போர்களுக்கும் போர் கைதிகளுக்கும் பட்டத்திற்கு போட்டியாக வருபவர்களுக்கும் கிடையாது என்பதில் பாதுஷா உறுதியாக இருந்தார்.

                                    டெல்லிக்கு வரும்போது தனக்கும் தன் மகனுக்கும் பாதுகாப்பாக இருநூறு மெய்க்காவலர்கள் கொண்ட படையுடன் வந்திருந்தார் சிவாஜி. தானும் தன் மகனும் கைது செய்யப்பட்ட நிலையில், மற்ற வீரர்களுக்கு எதுவும் நிகழக் கூடாது என்ற எண்ணம் சிவாஜிக்கு இருந்தது. அதனால் சிறையில் இருந்து பாதுஷாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். தனது படை பரிவாரம் தனது சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதினார். பாதுஷாவும் ஒரு சிறை கைதிக்கு எதற்கு பரிவாரம் என்று எண்ணி உடனே அனுமதி கொடுத்தார்.  சிவாஜியின் உண்மையான எண்ணம் என்னவென்றால் தனியாக இருக்கும்போது தப்பிச் செல்வது எளிதானது,  கூட்டத்துடன் தப்பிப்பது என்பது சற்று கடினம். அதனால் தான் கூட்டத்தை முதலில் அனுப்பி வைத்து விட்டார். மறுபடியும் சிவாஜி பாதுஷாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன்னை விடுவித்தால் எஞ்சிய வாழ் நாளை காசியில் சென்று சந்நியாசியாக கழிக்க உள்ளதாக கூறினார். அதற்கு பாதுஷாவோ, முஸ்லிம் சந்நியாசியாக மாறி தங்கள் வாழ்க்கையை இங்கேயே கழியுங்கள். உங்கள் பாதுகாப்பிற்கு தேவையான வசதிகளை நான் செய்து தருகிறேன் என்று பதில் அனுப்பினார்.

                   என் கோட்டைகளையெல்லாம் தங்களிடம் கொடுத்துவிட்டு தங்கள் ஆட்சியின் கீழ் நடக்க தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு தான் நேரில் சென்று தளபதிகளிடம் கூறினால் மட்டுமே அவர்கள் கோட்டையை விடுவிப்பார்கள். அதற்காகவே தான் நேரில் செல்ல வேண்டும் என்று மற்றொரு கடிதம் எழுதினார் சிவாஜி. கடிதம் மூலம் தளபதிகளிடம் சொல்லுங்கள். இல்லையேல் மீதம் இருக்கும் கோட்டைகளை எப்படி கைப்பற்ற வேண்டும் என்று மொகலாயர்களுக்கு தெரியும் என்ற பாதுஷாவிடமிருந்து பதில் கடிதம் வந்தது. சில நாட்கள் பிறகு தனக்கு வயிறு வலிப்பது போல் ஒரு வாரமாக நடித்தார் சிவாஜி. பின்னர் சரியானது போல் காட்டிக் கொண்டார். அப்போது மீண்டும் பாதுஷாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். தன்னுடைய வயிற்று வலி சரியாகி விட்டால் ஏழைகளுக்கு பழங்களை உணவாக அளிப்பதாக இறைவனிடம் வேண்டிக் கொண்டதாகவும் அதற்கு அனுமதி வேண்டியும் கடிதம் எழுதினார். இதற்கு, ஏழைகளுக்கு தானமாக பழங்கள் தானே? என்று அனுமதி கொடுத்து விட்டார். ஒவ்வொரு நாளும் அரண்மனையில் இருந்து கூடை கூடையாக பழங்கள் வெளியே சென்றன. ஆரம்பத்தில் அதை சோதனை செய்த அதிகாரிகள், பின்னர் அதை நிறுத்திவிட்டு அப்படியே அனுப்பி வைத்தனர். ஒரு நாள் கூடைக்குள் அமர்ந்து சிவாஜியும் அவரது மகனும் தப்பி சென்று விட்டனர். இதை அறிந்த பாதுஷா மிகவும் கோபம் அடைந்து அவரைத் தேட ஆணையிட்டார். நாடு முழுவதும் மொகலாய வீரர்கள் உஷார் படுத்தப்பட்டு தேடுதல் வேட்டையில் இறங்கினர். குதிரை படை வீரர்கள் முடுக்கி விடப்பட்டு மராட்டியம் செல்வதற்கான பாதைகளில் அதிதீவிரமாக தேடினர். இவ்வாறு நடக்கும் என்பதை முன்பே யோசித்த சிவாஜி, நேரடியாக மராட்டியம் செல்லாமல் அலகாபாத், காசி, கயா,  தெலுங்கானா, ஆந்திரா என்று சுற்றி வளைத்து மராட்டியம் சென்றடைந்தார்.

                             வெகு நாட்களுக்குப் பிறகு தன் தலைவனைப் பார்த்த மராட்டிய மக்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து கொண்டாடினர். பாதுஷா தன் மேல் கோபமாக இருப்பார் என்பதை உணர்ந்த சிவாஜி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு மொகலாயர்களிடம் எந்த பிரச்சினையும் செய்யவில்லை. இந்த மூன்று ஆண்டுகளில் பாதுஷாவின் கோபம் குறைந்து அமைதி அடைந்தார். சிவாஜி மராட்டிய நிலத்தில் ராஜா என்று அழைக்கப்படுவதை அங்கீகரிக்கவும் செய்தார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 1669 -ம் ஆண்டில் ஔரங்கசீப் இந்துக் கோயில் இடிப்புத் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்தவே, சிவாஜி மீண்டும் போர்க் கொடி உயர்த்தினார். 1670-ல் சூரத் நகரம் இரண்டாவது முறையாக மராட்டியர்களால் கைப்பற்றப்பட்டு சூறையாடப்பட்டது. ஆனால் இந்த முறையோ கிடைத்த செல்வங்களின் மதிப்பு 132 லட்சம். இதை வைத்து சிவாஜி தன் படைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொண்டார். மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி தான் இழந்த அனைத்து கோட்டைகளையும் மீண்டும் கைப்பற்றினார் சிவாஜி. மொகலாயர்களின் தேர்ந்த தளபதிகள் ஒருவர் பின் ஒருவராக ஒவ்வொரு போரில் சிவாஜியிடம் தோற்றனர். சூரத் நகரம் இனிமேல் மராட்டியத்திற்கு கப்பம் கட்ட வேண்டும் என சிவாஜி அரசாணை பிறப்பிக்கும் அளவுக்கு நிலைமை சென்றது. இதற்கு நடுவே வடமேற்கு எல்லையில் ஆப்கானிர்களின் தொல்லையும் ஔரங்கசீப்பை சிரமப்படுத்தியது. அதனால் தன் படையின் பெரும் பகுதியை ஆப்கான் எல்லைக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வந்தது. மொத்த படையும் இருக்கும்போதே சிவாஜியை சமாளிக்க முடியவில்லை இப்போது டெல்லியில் இருக்கும் ஒரு சிறிய படையை வைத்து என்ன செய்ய முடியும்? 1674 -ம் ஆண்டு ஜூன் 16 அன்று "சத்ரபதி" என்ற பட்டத்துடன் முடி சூட்டிக் கொண்டார் சிவாஜி.

                  இந்திய வரலாற்றில் சிவாஜி வருகைக்கு முன் எந்த மன்னரும் இராஜபுத்திரர்கள் உள்பட, சிற்றரசர்களாக காலம் கழித்து விட்டுப் போவதிலேயே இருந்தனர். ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் அளவு தொலைநோக்குப் பார்வை யாரிடமும் இல்லை. துகள்களாக சிதறிக் கிடந்த மராட்டிய மக்களை ஒன்று திரட்டி, ஒரு வழுவான சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க முடியும் என நிரூபித்தவர் சத்ரபதி சிவாஜி தான். ஆங்கிலேயே வரலாற்று ஆசிரியர்கள் இவரை அலெக்சாண்டருடன் ஒப்பிடுகின்றனர். குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டாமல் இந்திய மன்னர்களால் வலிமை பொருந்திய மாபெரும் மன்னர்களையும் போரில் தோற்கடிக்க முடியும், உலகம் முழுவதும் வணிகம் செய்ய முடியும், உலக அரங்கில் தலைநிமிர்ந்து நிற்கக்கூடிய பெரும் சாம்ராஜ்யத்தை ஊக்குவிக்க முடியும் என்கிற கனவை மக்கள் மனதில் விதைத்ததோடு மட்டுமல்லாமல் அதன் பெரும் பகுதியை செயல்படுத்தியும் காட்டியவர் சிவாஜி. சத்ரபதி என்று பட்டம் சூட்டிக்கொண்ட கையோடு சிவாஜி பாதுஷா ஔரங்கசீப்புக்கு எழுதிய கடிதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டு தன் எதிர்ப்பையும் அச்சமின்மையையும் வெளிப்படுத்துகிறார்.

                                 "மேன்மை தங்கிய சக்கரவர்த்தி ஆலம்கீர் அவர்களுக்கு, தங்கள் பெரிய பாட்டனார் அக்பர் பாதுஷா 52 ஆண்டுகள் ஆட்சி புரிந்து வல்லமை மிக்க கட்டுக்கோப்பான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் காட்டினார். மனித நேயத்தையும் நாட்டின் ஒற்றுமையையும் மதித்து நடந்து கொண்டார். இந்துக்கள், கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என அனைவரையும் தன் குடிமக்களாக சரிசமமாக பாவித்து நடத்தினார். எல்லோரையும் பாதுகாத்து ரட்சிப்பது தனது கடமை என்பதை அக்பர் பாதுஷாவின் பரந்த இதயம் புரிந்து கொண்டிருந்தது. அதனால் தான் மக்கள் அவரை ஜகத்குரு என்று அவரை பாராட்டினர். அவருக்கு பின் வந்து 22 ஆண்டுகள் கோலோச்சிய ஜஹாங்கீர் பாதுஷாவும் சரி அதற்குப்பின் ஆட்சிக்கு வந்து 32 ஆண்டுகள் நாட்டை பரிபாலித்த ஷாஜகானும் சரி பெரும் அளவு அக்பர் பாதுஷாவை பின்பற்றி நல்ல முறையில் ஆட்சி செய்தனர். அதனால் தான் மக்கள் அவர்களை ஏற்றுக் கொண்டனர். ஆனால் தாங்களோ இந்த விஷயத்தில் சற்றும் யோசிக்கவில்லை ஜிஸியா வரியை விதிக்க பலமும் துணிவும் அதிகாரமும் உங்கள் முன்னோர்களுக்கு இல்லாமலா இருந்தது? ஆனால் அவர்கள் இந்த காரியத்தில் இறங்கவில்லை.  தேவையில்லாமல் அந்த பாரபட்சமான வரி விதிப்பை ஓர் ஆயுதமாக கையில் எடுத்தது தாங்கள் தான். தங்கள் கொள்கையின் விபரீதத்தை பற்றி முழுமையாக உங்களிடம் விவரிக்காத உங்கள் அதிகாரிகளின் விசுவாசம் என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது அதனால் தான் உங்கள் வசம் இருந்த பல கோட்டைகள் கைவிட்டு போயின. என்னை பொருத்தவரை மராட்டியர்கள் தங்கள் இறுதி மூச்சு வரை உங்களை எதிர்ப்போம்" என்று எழுதிய கடிதத்தை ஏதோ ஒரு மராட்டிய கொள்ளைக்கார கூட்டத்தலைவனின் உலறல் போன்று எண்ணி பாதுஷா அலட்சியம் செய்துவிட்டார்.

                           உடனடியாக கோல் கொண்டா நகருடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டார் சிவாஜி. 1677-இல் பூனேவில் இருந்து கிளம்பி ஹைதராபாத்துக்கு பெரும் படையுடன் வந்த சிவாஜிக்கு கோலாகலமாக மக்கள் வரவேற்பளித்தனர். அங்கிருந்து திடீரென தமிழ்நாட்டில் இருக்கும் செஞ்சி என்ற ஊரை மராட்டிய படை மின்னல் வேகத்தில் தாக்கி கைப்பற்றியது. தொடர்ந்து வேலூரையும் முற்றுகையிட்டு கைப்பற்றினார். பின்னர் தஞ்சாவூர் மற்றும் திருச்சியையும் தாக்கி கைப்பற்றினார் சிவாஜி. தன் உறவினர் ஒருவரை இப்பகுதிகளை நிர்வகிக்கும் ஆளுநராக நியமித்து சுதந்திர பகுதிகளாக அறிவித்தார். இவ்வாறு சில ஆண்டுகள் தென்னிந்தியாவில் சூறாவளியாக ஆங்காங்கே போர் புரிந்த பல கோட்டைகளை கைப்பற்றினார் சிவாஜி. மராட்டியத்திற்கு திரும்பி செல்லும் வழியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு 1680 இல் ஏப்ரல் மாதத்தில் காலமானார். அவர் இறக்கும் தருவாயில் இருந்த போது என் மூச்சு அடங்கும் போது என் உள்ளங்கையில் ஒரு பசுவின் வாலை கொடுக்க வேண்டும். என் உயிர் பசுவின் வால் வழியாக அதன் கர்ப்பப்பைக்கு சென்று புனிதம் பெற வேண்டும். பாரசீகப் பன்னீரால் என் உடம்பை சுத்தம் செய்து சந்தன மரக்கட்டையில் என்னை எரித்த பின் கங்கை நதிக்கரையில் என் சாம்பலை கரைக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இவ்வாறாக சிவாஜி எனும் சகாப்தம் முடிவுக்கு வந்தது. ஆனால் மராட்டியர்களின் சகாப்தம் முடிவு பெறவில்லை. சிவாஜிக்குப் பிறகு அவரது மகன் சாம்பாஜி அரியணையில் அமர்ந்தார். வீரத்துக்கு குறைவில்லாவிட்டாலும் ஒழுக்கத்தில் மிகவும் பின் தங்கியிருந்தார். அதே சமயம் முகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்ப்பதில் மிகவும் முனைப்பு காட்டினார். சிவாஜி உருவாக்கி வைத்திருந்த மராட்டியர்களின் எதிர்ப்பு மனநிலை சாம்பாஜியை வழிநடத்த தூண்டியது. சாம்பாஜி முக்கியத்துவம் தந்த கேளிக்கையே இறுதியில் அவருக்கு எமனாக வந்தது. 1689 பிப்ரவரி 11 அன்று மகாராஷ்டிராவில் கோலாப்பூருக்கு அருகாமையில் தன் பிரதம அமைச்சருடன் கேளிக்கையில் ஈடுபட்டிருந்த சாம்பாஜியை முகலாயப் படை சுற்றி வளைத்து கைது செய்தது. சாம்பாஜியுடன் அப்போது இருந்தது வெறும் 25 மெய் காவலர்கள் மட்டுமே. மெய் காவலர்களை அதே இடத்தில் கொன்றுவிட்டு, சாம்பாஜியையும் அவரது பிரதம அமைச்சரை மட்டுமே கைது செய்து டெல்லி கொண்டு சென்றனர். இவர்களை சிறையில் வைத்து ஏராளமான சித்திரவதைகள் செய்ய பாதுஷா ஆணையிட்டார். சாம்பாஜியின் கண்கள் ஆணிகளால் ஊடுருவப்பட்டன.  இவ்வாறு ஆனபோதும் பாதுஷா வந்தபோது அவரின் முகத்தில் எச்சியை உமிழ்ந்து தன் எதிர்ப்பை காட்டினார் சாம்பாஜி. கோபத்தின் உச்சிக்கு சென்ற பாதுஷா, அவர்களின் தலையை சீவ ஆணையிட்டார். அவர்களின் தலை டெல்லி கோட்டையின் வாசலில் சில வாரங்களுக்கு தொங்க விடப்பட்டன.

                             இதை அறிந்த மராட்டிய மக்கள் சாம்பாஜியின் ஒழுக்கக்கேடான விஷயங்களை மறந்து, தங்களின் தலைவனாக ஒரு மனதாக ஏற்றுக் கொண்டனர். மேலாக பார்த்தால் மராட்டிய எதிர்ப்பை ஔரங்கசீப் தீர்த்து கட்டி விட்டதாக தோன்றலாம். ஆனால் உண்மை அதுவல்ல. சிவாஜி பரவலாக தூண்டி விட்டிருந்த எதிர்ப்பு உணர்ச்சியாக மாறி பூமிக்கு அடியில் மக்கள் மனதில் தவித்துக் கொண்டிருந்ததால் முகலாயர்களால் தென்னிந்தியாவில் எங்கும் ஆழமாக கால் பதிக்க முடியவில்லை. 

                               தோல்வி என்பது வினாடியில் எரிக்கும் நெருப்பை போலவோ, கண நேரத்தில் பெருக்கெடுத்து மூழ்கடிக்கும் வெள்ளத்தைப் போலவோ இருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. வரட்சி சூழ்ந்த கடும் பாலைவனம் போல முடிவில்லாமல் ஒருவரை படிப்படியாக சூழ்வதும் உண்டு. ஔரங்கசீப் அனுபவித்தது இரண்டாவது வகையான தோல்வி. சுருக்கமாக சொன்னால் ஆழம் கீரின் கடைசி கால வாழ்க்கை சோகம் சூழ்ந்ததாக அமைந்தது. தன் 50 ஆண்டுகால ஆட்சியின் முடிவில் மொகலாய சாம்ராஜ்ஜியம் சரிய தொடங்கி விட்டது என்பதை பாதுஷா உணர்ந்திருந்தார். அரசியல் சூழல் ஏற்படுத்திய கவலைகள் ஒரு புறம் என்றால், வீட்டு சூழ்நிலை ஏற்படுத்திய சோகம் மறுபுறம் என பாதுஷாவை பல துன்பங்கள் சூழ்ந்தன. கடைசி காலத்தில் அன்பு, பாசம் எதற்கும் இடமில்லாமல் ஔரங்கசீப் இன்‌ தனிப்பட்ட வாழ்க்கையும் சோகமயமானது. யாரையும் அருகே சேர்க்காமல் தவிர்த்து வாழ்ந்து வந்தார் பாதுஷா. கடைசி நாட்களில் தந்தையின் அத்தியாவசிய தேவைகளை கவனித்துக் கொள்ள வயது முதிர்ந்த மகள் ஜீனத் உன்னிஸா மற்றும் பேச்சுத் துணைக்கு கடைசி மனைவி உதய்பூரி பேகம். இவர்களே பாதுஷா‌ அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

                             ஔரங்கசீப்பின் மூத்த மகன் முகமது சுல்தான், தந்தையிடமிருந்து பிரிந்து ஷையா பிரிவை தழுவிய சித்தப்பா ஷூஜா  உடன் இணைந்து செயல்பட்டதால் சக்கரவர்த்தியின் கோபத்துக்கு ஆளாகி சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 20 வயது நிரம்பிய தன் மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார் பாதுஷா. 16 ஆண்டுகள் சிறையில் இருந்த இளவரசர் டிசம்பர் 1676 இல் சிறையிலேயே உயிரிழந்தார்.

                              ஷா ஆலம் என்று அழைக்கப்பட்ட இரண்டாவது மகன் முஆஸம் ( ஔரங்கசீப் பிறகு பகதூர்ஷா‌ என்ற பெயருடன் அரியணை ஏற போகிறவர் ) பீஜப்பூர் மற்றும் கோல்கொண்டா சுல்தான்களுடன் ரகசிய உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டதாகவும்,  கஜானா பணத்தில் கை வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டார். அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார் பாதுஷா. விடுதலை ஆன பிறகும் கூட தந்தையின் காலடி சத்தம் கேட்டாலே நடுங்கும் அளவுக்கு பயத்திலேயே வாழ்ந்தார் இந்த இரண்டாம் இளவரசர்.

                               மூன்றாம் மகனான ஆஸாம் தந்தையிடம் எந்த தண்டனையும் பெறவில்லை என்றாலும் இவராவது சற்று தலையெடுப்பார் என்று ஔரங்கசீப் நம்பினார். ஆனால் கடைசியில் அந்த நம்பிக்கை பொய்த்து போனது. முன்கோபம், ஆத்திரம்,  அகம்பாவம் போன்ற சகல வேண்டத் தகாத குணங்களும் இவரிடம் இருந்தன. ஔரங்கசீப் மறைவுக்குப் பிறகு நடக்கப் போகும் வாரிசு போரில் கொரில்லா தாக்குதலில் இவரும் கொல்லப்பட்டார்.

                             சற்று வயதான காலத்தில் சக்கரவர்த்திக்கு கடைசியாக பிறந்த காம்பக்ஸ் என்ற மகனும் உருப்படவில்லை. அந்தப்புரத்தில் செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்டு சீரழிந்து போனவர் இந்த இளவரசர். சிவாஜியின் வாரிசான ராஜாராமை வழிக்கு கொண்டு வர, செஞ்சிக்கு அனுப்பப்பட்ட டெல்லிபடைக்கு தலைமை தாங்கி சென்ற காம்பக்ஸ், அங்கே தன் வீரத்தை காட்டுவதற்கு பதில் எதிரிகளிடமே ரகசிய உடன்படிக்கை செய்து கொண்டார். இந்தக் குற்றத்திற்காக பாதுஷா பல ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். பிற்பாடு இவரும் வாரிசு போரில் கொல்லப்பட்டார்.

                               பாதுஷா ஷாஜகான் தன்மகன் தாராவுக்கு சோதனைகளை சந்திக்கும் நெஞ்சுறுதியை புகட்டாமல் அளவுக்கதிகமாக அரவணைப்பும் பாசமும் காட்டியதால் அந்த மகன் வீழ்ச்சி அடைந்தார் என்பது பொதுவான கருத்து. ஆனால் ஔரங்கசீப் விஷயம் வேறு. மகன்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் தராமல் அவர்களுடைய சுயமரியாதையை பற்றி துளியும் கவலைப்படாமல், அவமரியாதையாக அவர்களை நடத்தினார் சக்கரவர்த்தி. இந்த அணுகுமுறையும் தோல்விதான் அடைந்தது. அதேசமயம் கவலைகளுக்கு மத்தியில் பாதுஷாவின் கடமையும் தொடர்ந்தன. கிருஷ்ணா நதிக்கும் பீமா நதிக்கும் இடைப்பட்ட பிரதேசத்தை பிடியநாயக்கர் என்ற சிற்றரசர் ஆண்டு வந்தார். டெல்லி அரியணையின் நிலைமையை தொலைநோக்கி பார்த்து இதுதான் தக்க சமயம் என்று போர்க் கொடி உயர்த்தினார். பாதுஷா ஔரங்கசீப் தலைமையிலான டெல்லி படை,  அந்த சிற்றரசரை தண்டிக்க கிளம்பியது. அப்போது பாதுஷாவுக்கு 86 வயது. 

                               நாடாளப் பிறந்தவர்களுக்கு ஓய்வு என்பது கிடையாது என்று சிலர் சொல்வதுண்டு அது ஔரங்கசீப் வாழ்க்கையில் நிதர்சனமானது. பிடியநாயக்கருக்கு மராட்டியர்கள் உதவி அனுப்பியதால் மொகலாயர்கள் முற்றுகை மூன்று மாதங்கள் நீடிக்கிறது. ஒரு வழியாக ஏப்ரல் 1705 இல் எதிரியின் கோட்டை வீழ்கிறது. இங்கிருந்து கிளம்பி வரும் வழியில் தேவப்பூர் என்ற கோட்டையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்படுகிறார் பாதுஷா. இந்த நிலையிலும் தட்டு தடுமாறி தொழுகைக்கு செல்கிறார். தவிர மனுக்களை படிப்பது, தூதர்களை சந்திப்பது போன்ற தன் அத்தியாவசிய கடமைகளை விட்டு பாதுஷா விலகவில்லை. கூட இருந்தவர்கள் பயத்தில் ஆழ்ந்தனர். ஒருவேளை பாதுஷா இங்கு இறந்துவிட்டால் தங்கள் நிலை குறித்து கவலைப்பட்டனர். ஏனெனில் எதிரிகள் சூழ்ந்த பகுதியில் பாதுஷா இல்லை என்றால் படை என்ன செய்யும்? என யாருக்கும் தெரியாது. பாதுஷாவின் ஆணையையும் ஆலோசனையும் நம்பியே அனைவரும் செயல்பட்டு வந்தனர். தன் மறைவுக்குப் பிறகு அரியணையை பிடிக்க தன் மகன்கள் ஆளுக்கு ஒரு படையுடன் தயாராகிக் கொண்டிருக்கும் செய்தி பாதுஷா வை வந்தடைகிறது. வேண்டுமானால் நாட்டைப் பிரித்துக் கொள்ளுங்கள். இரத்த ஆறு ஓட வேண்டாம் என்று மகன்களுக்கு கடிதம் எழுதுகிறார் பாதுஷா. ஆனால் எந்த மகனும் இந்த அறிவுரையை கேட்க தயாராக இல்லை. தனக்குப் பிறகு முற்றிலும் நாசம் தான் என்பதை ஔரங்கசீப் உணர்ந்து கொள்கிறார்.

                         1707, பிப்ரவரி 20 அன்று வெள்ளிக்கிழமை. காலையில் தொழுகை முடித்துவிட்டு தட்டு தடுமாறி மெல்ல திரும்பி வந்து படுக்கையில் சாய்ந்து கொண்டார் ஆலம்கீர் ஔரங்கசீப் பாதுஷா.  உதடுகள் தொடர்ந்து இறைவனின் பெருமையை முணுமுணுத்தவாறு இருந்தன. விரல்கள் ஜெபமாலையை உருட்டிக் கொண்டிருந்தன. திடீரென்று சக்கரவர்த்தியின் மூச்சு கடைசி முறையாக வெளிப்பட்டு முடிவாக நின்று போனது.  அப்போது அவருக்கு வயது 91. சக்கரவர்த்தி தன் உயிலின் படி, தன் கைகளால் தைக்கப்பட்ட குல்லாக்களை விற்ற பணம் நாலு ரூபாய் இருக்கிறது. அதையே தன் உடலை போர்த்துவதற்கு துணி வாங்க பயன்படுத்த வேண்டும். புனித குர்-ஆனிலிருந்து நான் எடுத்த நகல்களுக்கு எனக்கு கிடைத்த சம்பள பணம் 350 ரூபாய். இதை நான் இறந்த நாளன்று ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும். இந்த நாடோடியின் கல்லறை மிகவும் எளிமையாக வானத்தைப் பார்த்தவாறு இருக்க வேண்டும். எந்தவித ஆடம்பரம் இருக்கக் கூடாது. இசை, ஊர்வலம் என எதுவும் இருக்கக் கூடாது. என் கல்லறை மண்ணால் மூடப்பட்டு இருக்க வேண்டும். அங்கே சுற்றிலும் பசுமையான மரம், செடிகள் வளர்த்திருக்க வேண்டும் என உயிலில் குறிப்பிட்டிருந்தார். பாதுஷா உத்தரவின் படி அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.

                                மொகலாய சாம்ராஜ்யத்தின் கடைசி வேர், தன் உயிரை விட்டது.  ஔரங்கசீப் இறந்த உடனேயே, அவர் நினைத்தபடி வாரிசுகளின் வாட்கள் இரத்த பசியோடு உறைகளிலிருந்து வெளிப்பட தொடங்கின.

                           தொடரும்



            

                                      


Comments

Popular posts from this blog

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Ways to reduce my Tax

UDYAM - Whether a boon or bane for MSMEs