இந்தியாவின் கதை : ஷாஜகான்

             சக்கரவர்த்தி ஜஹாங்கீர் கண்ணை மூடியதும் நாட்டில் கோஸ்டி பூசல் மற்றும் அதிகாரச் சண்டை வெளிப்படையாகவே வெடித்தது. பாதுஷா மறைந்த நேரம் இளவரசர் ஷாஜகான் தெற்கே தட்சிணப் பிரதேசத்தில் இருந்தார். இதை

 பயன்படுத்திக் கொள்ள நினைத்த நூர்ஜகான், தன் அதிகாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளத் தன் முதல் மகளின் கணவரான ஷாரியாருக்கு பட்டம் சூட்ட திட்டமிட்டார். அதற்காக தெற்கிலிருந்து ஷாஜகான் வருவதற்குள் லாகூரில் இருந்து ஷாரியார் ஆக்ரா வரவேண்டும் என்று செய்தி அனுப்பினார் நூர்ஜகான். ஆனால் மகாராணி நூர்ஜகானின் சகோதரர் அஸஃப் கான் தற்போது இளவரசர் ஷாஜகானுக்கு மாமனார், அதாவது மும்தாஜின் தந்தை. 

                    அஸஃப்கான், மருமகனான ஷாஜகானுக்கு ஆதரவாக செயல்பட ஆரம்பித்தார். முதல் படியாக சகோதரி நூர்ஜகானிடம் இருந்த ஷாஜகானின் பிள்ளைகளான தாரா ஷூகோ, ஷாஷூஜா மற்றும் ஔரகங்கசீப் பை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார். பின்னர், ஷாஜகானின் அண்ணனான மறைந்த குஸ்ரூவின் மகனான தவார் பக்ஷ் என்ற அப்பாவி இளைஞனுக்கு பட்டம் சூட்டி டெல்லி அரியணை வெற்றிடமாக இல்லை என்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கினார். இதனால் லாகூரில் இருந்து படையுடன் வரும் ஷாரியார் ஒரு ராஜ துரோகியாகவே கருதப்பட்டு அவருடன் டெல்லி படை அதிகாரப்பூர்வமாகவே போரிட முடியும் என்ற ஒரு சூழ்நிலை உருவானது. ஆஸஃப்கான் நினைத்தது நடந்தது. 

                       போரில் தோல்வி அடைந்த ஷாரியார் அரண்மனைக்குள் சென்று ஓடி ஒளிந்து கொண்டார். அஸஃப் கானின் விசுவாசிகள் அவரைக் கண்டுபிடித்து இழுத்து வந்து சிறையில் அடைத்தனர். சில நாட்கள் பிறகு முகலாயர்களுக்கே உரித்தான முறையில் அவரது கண்கள் தோண்டப்பட்டன. வெற்றி...! என அஸஃப்கான் செய்தியனுப்ப, இன்னும் வேகமாக டெல்லி நோக்கி வந்தார் ஷாஜகான். அதற்குள் மாமனாருக்கு மற்றொரு செய்தியை அனுப்பினார். தன்னுடைய ஆட்சிக்கு வருங்காலத்தில் யாரும் போட்டியிடக் கூடாது என்று கருதிய ஷாஜகான், தன் தம்பி அண்ணனின் மகன்,  சித்தப்பா மகன்கள் என அனைவரையும் தீர்த்துக்கட்ட ஆணையிட்டார் ஷாஜகான். தற்போது நெருஞ்சி முட்களாக இருக்கும் இவர்கள் வருங்காலத்தில் ஆணிகளாக மாறக்கூடாது என்பது அவரது எண்ணமாக இருந்தது. என்ன செய்வது?? ராஜ்ஜியம் என்று வந்துவிட்டால் சொந்தத்திற்கு இடம் கிடையாது. ஆனால் வாசகர்கள் கவலைப்பட வேண்டாம். வருங்காலத்தில் ஷாஜகானுக்கும் இதே நிலை வரப்போகிறது என்பதை தற்போது அவர் அறியவில்லை. அதை வருங்காலத்தில் செய்ய காத்திருப்பவர் அவரது மகன் ஔரங்கசீப். 

                       மருமகனின் உத்தரவுப்படி தற்போதைய பொம்மை மன்னரான தவார் பக்ஷ், இளவரசர் ஷாரியார் மற்றும் ஷாஜகானின் சித்தப்பா மகன்கள் என அனைவரும் ஒரே நாளில் கூண்டோடு மேலுலகம் அனுப்பி வைக்கப்பட்டனர். ஷாஜகான் அறியணைக்கு நிம்மதியாக நடந்து செல்ல ரத்த(ன)க் கம்பளம் விரித்து வைத்தார் அஸஃப் கான். பிப்ரவரி மாதம் 4 -ம் தேதி, 1628 இல் ஷாஜகான், மொகலாய சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தியாக முடிசூடினார். விழா மிகவும் பிரசித்தியாக நடைபெற்றது. இந்த வெற்றிக்கு மிகவும் பாடுபட்டவரான ஆஸஃப்கான், பிரதம அமைச்சராக பதவி பெற்றார். ஆரம்பத்திலிருந்தே நூர்ஜகானுக்கு எதிராக இருந்த மஹபத் கான் அவரது ஆசையின்படி ஆஜ்மீருக்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். நூர்ஜகான்.......??

                   பெரும் அரசியல் சக்தியாக விளங்கி, தற்போது ஆதரவற்று நிற்கும் நூர்ஜஹானின் பொது வாழ்க்கை இத்தோடு முடிவுற்றது. தேவையில்லாமல் தன் சிற்றண்ணையை அவமானப்படுத்த ஷாஜகான் விரும்பவில்லை. அதனால் அவரும் அவரது மகளும் அந்தப்புரத்தில் தங்கிக் கொள்ள அனுமதி கொடுத்தார். மேலும் ஆண்டுக்கு ஓய்வூதியமும் வழங்கினார். தன் நிலையை புரிந்து கொண்ட நூர்ஜஹான், கலவரம் செய்யாமல் அடங்கி ஒடுங்கி இருந்தார். 

                      ஜஹாங்கீர் மறைவுக்குப் பிறகு சுமார் 18 ஆண்டுகள் வாழ்ந்த நூர்ஜகான் தனக்கு கிடைத்த ஓய்வூதியத்தில் தன் கணவர் கல்லறையின் அருகில் தனக்கும்  கல்லறை வேண்டும் என்பதற்காக அங்கு ஓர் நிலம் வாங்கினார். பிற்காலத்தில் அவர் அங்கேயே புதைக்கவும் பட்டார். ஆனால் விதி ஆடிய விளையாட்டால் இன்று இந்த ஜோடியின் கல்லறைகளுக்கு நடுவே ஒரு ரயில் பாதை செல்கிறது. 

                                இரத்தத்தினால் கோலம் போடப்பட்ட படிகளில் ஏறி ஷாஜகான் அரியணையில் அமர்ந்தார். ஆனால் தற்போது அவர் எதிர்ப்பையும் சமாளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தது. அதுவும் இருவரால் - ஒருவர் ஹிந்து, மற்றொருவர் முஸ்லிம். முன்னாள் பாதுஷா ஜஹாங்கீர் கேட்டுக் கொண்டதற்காக அக்பரின் அருமை தோழர் அப்துல் ஃபஸலை  வழிமறித்துக்கொன்ற ராஜபுத்திர தலைவர் "வீர்தேவ் சிங்". நினைவிருக்கிறதா? அவருடைய மகன் ஜஜ்ஹார்தேவ் சிங் கிற்கு அபரிமிதமான ஆசைகள் இருந்தன. அதுவும் டெல்லியின் அரியணை மீது. ஆக்ராவுக்கு சுமார் 100 மைல் தொலைவில் உள்ள ஓர்ச்சா ராஜ்ஜியத்தை ஆண்டு கொண்டு இருந்தார் ஜஜ்ஹார். டெல்லிக்கு எதிராக படை திரட்டி புரட்சியில் இறங்கினார். அவரை வழிக்கு கொண்டுவர ஷாஜகானின் 16 வயது நிரம்பிய மகன் ஔரங்கசீப் புறப்பட்டார். சுமார் 20,000 மொகலாய வீரர்கள் கடல் போல் வருவதை பார்த்து தன் நிலை உணர்ந்தார் ஜஜ்ஹார். கண்ணிமைக்கும் நேரத்தில் போர் முடிவடைந்தது. ஜஜ்ஹாரின் சில மகன்கள் கொல்லப்பட்டனர். சில மகன்கள் மொகலாயர்களால் மதமாற்றம் செய்யப்பட்டனர். அரண்மனை பெண்கள் அனைவரும் டெல்லிக்கு பணிப்பெண்களாக அழைத்து வரப்பட்டனர். வழுக்கட்டாய மதமாற்றம் செய்ததன் மூலம், அக்பர் கஷ்டப்பட்டு கட்டிய இந்து - முஸ்லீம் மத ஒற்றுமை எனும் கோட்டையில் விரிசல் விழ ஆரம்பித்தது. (பிற்பாடு ஔரங்கசீப் காலத்தில் கோட்டையே இடிந்தது வேறு கதை).  காட்டுப் பகுதிக்குள் ஒளிந்து கொண்ட ஜஜ்ஹார்,  அங்கு வசித்த காட்டுவாசிகளுடன் பிரச்சனை செய்ததால் கொடூரமான முறையில் காட்டுவாசிகளால் கொல்லப்பட்டார். இதை கண்டுபிடித்த மொகலாய தளபதி ஒருவர், அவரின் தலையை டெல்லிக்கு அனுப்பி வைத்தார்.

                       மொகலாயப் படையில் என்ன தான் ஆப்கானிய வீரர்கள் பணியாற்றினாலும், அவர்களுக்குள் மொகலாயர்களை அடியோடு வெறுக்கும் வெறுப்பு இருந்தது. ஏனென்றால் முன்னொரு காலத்தில் டெல்லியை ஆண்டவர்கள் இந்த ஆப்கானியர்கள். தற்போது அந்த அரியணை மொகலாயர்களிடம் உள்ளது. அவ்வாறு குஜராத்தில் கவர்னராக இருந்த கான் ஜஹான் லோடி என்பவருக்கும் இந்த மொகலாயர்கள் மீது வெறுப்பும், டெல்லி அரியணை மீது ஆசையும் இருந்தது. ஷாஜகான் அரியணை ஏறிய போது இருந்த ஒரு சிறிய குழப்பத்தை தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைத்தார். டெல்லிக்கு எதிராக படை திரட்டினார். ஆனால் பாதுஷா இவர் மீது மரியாதை வைத்திருந்ததால் போரை விட்டு, இவருடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட டெல்லிக்கு வரவழைத்தார். டெல்லிக்கு வந்த பின்பு அவருக்கு மிகவும் பயம் வந்துவிட்டது. தன்னை கைது செய்து, கொலை செய்து விடுவார்களோ என்று அச்சமடைந்து அரண்மனையை விட்டு ஓடினார். அதனால் மொகலாய வீரர்களும் துரத்திச் சென்றனர். இருதரப்பு வீரர்களும் இதை தவறாக புரிந்து கொண்டு சண்டையில் ஈடுபட்டனர். இறுதியில் மொகலாய வீரர்களால் அனைவரும் கொல்லப்பட்டனர். 

                              உறவினர், உள்நாட்டு எதிர்ப்பு என்பதை தாண்டி அயல் நாட்டுடன் மோத வேண்டிய அவசியமும்  ஷாஜகானுக்கு வந்தது. வங்காளத்தில் பல ஆண்டுகளாகவே ஏராளமான போர்ச்சுக்கீசியர்கள் தங்கி, உப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்கான அங்கீகாரம் ஜஹாங்கீர் காலத்தில் இருந்தே தரப்பட்டிருந்தது. இவர்களால் அரசு கஜானாவும் வரி மூலமாக நிரம்பியதால் பாதுஷா ஷாஜகானும் இவர்களை கண்டு கொள்ளாமல் விட்டிருந்தார். ஆனால் குளிர் விட்டு போனது அவர்களுக்கு. திடீரென்று கொள்ளையர்கள் போல் ஊருக்குள் புகுந்து மக்களிடம் இருக்கும் செல்வங்களை பறித்துக் கொள்வதும் மக்களை கைதிகளாக பிடித்து வருவதும் என பல்வேறு அக்கிரமங்களில் ஈடுபட்டனர்.  இது பாதுஷாவின் காதுகளுக்கு சென்றடைய சற்று தாமதமானது. ஆனால் இதைக் கேள்விப்பட்டவுடன் ஒரு அதிரடிப்படையை வங்காளத்துக்கு அனுப்பினார் பாதுஷா. சுமார் மூன்று மாதங்கள் வங்காளத்தில் முகாமிட்ட அதிரடிப்படை நிலைமையை புரட்டி போட்டது. போர்ச்சுகீசியர்களை சுற்றி வளைத்து சுமார் மூன்று மாதமாக வேட்டையாடினர். யாரையும் உயிரோடு விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தனர். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மொகலாய தளபதிகளுக்கு இலட்சக் கணக்கில் லஞ்சம் தர முன் வந்தும் அது பலனளிக்காமல் போனது. டெல்லி படையின் வாட்கள் சுழன்றன, துப்பாக்கிகள் தொடர்ந்து இயங்கின. மொத்தமாக கொல்லப்பட்ட போர்ச்சுக்கீசியர்களின் எண்ணிக்கை சுமார் 20,000 மேல் இருக்கும் என ஒரு வரலாற்று ஆசிரியர் கூறுகிறார். இந்தியாவில் கிறிஸ்துவ மதத்தை பரப்புவதற்காக அவர்கள் வைத்திருந்த நூற்றுக்கணக்கான விக்கிரகங்கள் வைகை நதியில் சுக்கு நூறாக உடைத்து வீசப்பட்டன. அதன் பிறகு போர்ச்சிகர்கள் வாலாட்டவில்லை. 

                    தந்தை ஜஹாங்கீர் நூர்ஜஹானிடம் காதல் வயப்பட்டது போல, மகன் ஷாஜகான் மற்றொரு பெண்ணிடம் காதல் வயப்பட நேரிட்டது. ஆக்ரா அரண்மனை வளாகத்துக்குள் ஆண்டுதோறும் அரச குல பெண்கள் ஏற்பாடு செய்யும் ஒரு சந்தையில் ஒரு கடையில் பணியில் இருந்தார், பேரழகி அர்ஜூமான் பானு பேகம். இவர் மகாராணி நூர்ஜஹானின் சகோதரர் அஸஃப் கானின்  மகள். பேரழகியை பார்த்தவுடன் அந்த நொடியில் காதலில் விழுந்தார் இளவரசர் ஷாஜகான். அந்தப் பெண்ணிடம் பேசுவதற்காக கடைக்குள் சென்று ஒரு கண்ணாடியைக் காண்பித்து அதன் விலையை கேட்டார். இளவரசரின் நோக்கத்தை புரிந்து கொண்ட அழகியும், குறும்புத்தனமாக "அது வெறும் கண்ணாடி அல்ல, வைரத்திலான பொருள். விலை பல லட்சம் ஆகுமே.... இளவரசால் சமாளிக்க முடியுமா?" என்று கேட்க, இளவரசரும் சிரித்துக்கொண்டு பணத்தை கொடுத்து விட்டார். பறிபோனது பணம் மட்டுமல்ல இளவரசரின் இதயமும் தான். இளவரசர்களுக்கு நடக்கும் திருமணம் என்பது மிக முக்கியமானது. அதில் ராஜ்ய உறவு,  எல்லைகளை விஸ்திரிப்பது என பல்வேறு அம்சங்கள் அடங்கியிருக்கும். ஆனால் இளவரசரின் காதல் விவகாரம் தெரிந்தவுடன், எந்த ஒரு மறுப்பும் சொல்லாமல் சம்மதம் தெரிவித்தார் பாதுஷா ஜஹாங்கீர். 1612-ம் ஆண்டு இவர்களின் திருமணம் நடைபெற்றது. அந்த கணமே, நீ இனிமேல் "மும்தாஜ்" (அரண்மனையில் முதன்மையானவள்) என அழைக்கப் படுவாய் என அறிவித்தார். இவ்வாறு தான் அர்ஜூமான் பானு பேகம், மும்தாஜ் ஆக ஆனார். 

                    காதலின் முடிவு திருமணம் எனில் திருமணத்திற்குப் பிறகு அந்த காதலும் முடிவு பெறும் என்று ஒரு பழமொழி உண்டு. ஆனால் அந்த பழமொழியை முற்றிலுமாக பொய்ப்பித்து காட்டினர் ஷாஜகான் - மும்தாஜ் தம்பதியினர். வயதில் கூட வித்தியாசம் இல்லாத இத்தம்பதியினர் உடலாலும் உள்ளத்தாலும் வயப்பட்டு கிடந்தனர். அதற்கேற்றார் போல் இவர்கள் மொத்தமாக 14 பிள்ளைகள் பிறந்தன. (அவற்றில் ஏழு பிள்ளைகள் இறந்து போயின). மிகச்சிறந்த ஒரு லட்சிய மனைவியாக மும்தாஜ் விளங்கினார் என்பதில் எந்த ஒரு வரலாற்று ஆசிரியருக்கும் மாற்று கருத்து இல்லை. ராஜதந்திரியின் மகளாக இருப்பதாலோ என்னவோ மும்தாஜுக்கும் மதி நுட்பம்  அபரிமிதமாக இருந்தது. அதற்காக அரசரை அவர் "டாமினேட்" செய்ய வேண்டும் என்று என்றுமே எண்ணியதில்லை. தனது அன்பு பிடிக்குள் கணவரை இறுத்தி வைத்துக் கொண்டார். அவ்வளவுதான். கணவர் என்ற முறையில் மனைவியாகவும் நண்பராகவும், அரசர் என்ற முறையில் ஒரு மந்திரியாகவும், ஆலோசகராகவும், வழிகாட்டியாகவும் மிகச் சிறந்த முறையில் செயல்பட்டார். அரசாங்க சார்பில் வெளியிடப்படும் சட்டங்கள்,  அரசாணைகள் என எல்லாம் மும்தாஜ் க்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் பெற்ற பிறகு எல்லாம் நடைமுறைப்படுத்தப்படும்.

                             மகாராணியாக ஆன பிறகும் கூட சொகுசு வாழ்க்கைக்கு மும்தாஜ் என்றுமே ஆசைப்பட்டதில்லை. பாதுஷா ஷாஜகான் எங்கு சென்றாலும் அவருடனே செல்வார். அது போர்க்களமாக இருந்தாலும் கூட.... மகாராணி என்பதற்காக அரண்மனையில் அவர் ஓய்வெடுக்க விரும்பவில்லை. அரசர் இருக்கும் இடமே தனக்கு அரண்மனை என்று எண்ணி வாழ்ந்தார். மும்தாஜ் என்ற அழகியை பற்றி அவ்வளவு தூரம் விவரிக்க வேண்டுமா? என்று வாசகர்கள் நினைக்கலாம். ஆனால் என்ன செய்வது? உலக அற்புதங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் அடையாளமான அந்தப் பெண்ணை பற்றி இவ்வளவு கூட கூறவில்லை என்றால் அதற்கு அர்த்தம் இருக்காது.  

                1631 ஆம் ஆண்டு, ஜூன் 7 -ம் தேதி பீஜப்பூர் சுல்தான்களை வழிக்கு கொண்டு வர, மத்திய இந்தியாவிற்கு படையெடுத்து வந்தார் ஷாஜகான். மும்தாஜ் பதினாழாவது பிரசவத்தில் குழந்தையைப் பெற்றெடுத்தவுடன், ஜன்னி வந்தது. அரச வைத்தியர்கள் போராடினர். ஆனால் மொகலாயர்கள் இதில் தோல்வி அடைந்தனர். மும்தாஜ் காலமானார். ஷாஜகான் கதறி அழுகிறார். எவராலும் எதுவும் செய்ய இயலவில்லை. தற்காலிமாக அங்கே அவரை புதைப்பதைத் தவிர. மனைவி இறந்த அதிர்ச்சியில் இருந்து ஷாஜகான்  ஓரளவு மீளவே இரண்டு ஆண்டுகள் ஆனது. மன்னர் புத்தாடைகள் அணியவில்லை. இன்பம் தரும் எந்த ஒரு செயலிலும் அவர் இறங்கவில்லை. பாதுஷா என்கிற முறையில் அரசாங்கத்தை நடத்த வேண்டிய பொறுப்பு இருப்பதால் அத்தியாவசிய கடமைகளில் மட்டுமே ஈடுபட்டார். ஒரு நாள் தனது நெருங்கிய ஆலோசகர்களுடன் மன்னர் இருந்தபோது மனைவி பற்றி பேச்சு திரும்பியது அப்போது காதல் வயப்பட்ட அவர் என் மனைவிக்காக ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என பேச்சு வாக்கில் கூறினார். அடுத்த நிமிடமே இந்த சிந்தனை விஸ்வரூபம் எடுக்க, துவண்டு போயிருந்த பாதுஷா செயலில் இறங்கினார். 

                         தட்சிணப் பிரதேசத்தில் தற்காலிகமாக புதைக்கப்பட்ட மும்தாஜின் உடல் கோலாகலமாக ஊர்வலமாக டெல்லிக்கு எடுத்துவரப்பட்டது. அவர் இறந்து சரியாக ஒரு வருடம் ஆன பிறகு தாஜ்மஹால் கட்டும் பணி தொடங்கியது. யமுனை நதிக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. உடனே ராஜ வேகத்தில் பணிகள் தொடங்கின. சில நாட்களிலேயே சுமார் 20,000 நபர்கள் கட்டிட வேலைக்காக வந்து இறங்கினர். தாஜ்மஹாலுக்கான வரைபடத்தை தயாரித்தவர் பல நாடுகளில் இருக்கும் கைதேர்ந்த சிற்பிகள் எனவும் ஒவ்வொரு சிற்பிகளின் பெயர்களையும் சிலர் குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில் தாஜ்மஹாலை வடிவமைத்தது அனைவரது கூட்டு முயற்சியே. அனைத்து வேலைப்பாடுகளும் ஷாஜகான் தனிப்பட்ட முறையில் அவரே கவனம் செலுத்தி, ஒப்புதல் அளித்த பிறகே நடைபெறும். கல்லறையாக மட்டும் இல்லாமல் மக்கள் வந்து செல்லும் ஒரு புனித இடமாகவும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார் ஷாஜகான். அதற்கேற்ப தங்குமிடங்கள், தோட்டங்கள், கடைவீதிகள் என அனைத்தையும் திட்டமிட்டு உருவாக்கினார். முகலாயர்கள் ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் மட்டுமே தாஜ்மஹாலில் அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

                        வெளிப்புற வாயிலுக்குள் நுழைந்தவுடன் தொலைவில் தெரியும் தாஜ்மஹாலை பார்த்தால், இவ்வளவு சிறியதா? என்று நினைக்கத் தோன்றும். ஆனால் போகப் போகப் பெரிதாகிக் கொண்டே போய், அருகில் சென்றதும் பிரம்மாண்டமாக காட்சி தரும் வகையில் தாஜ்மஹால் அமைக்கப்பட்டிருக்கும். தாஜ்மஹாலை சுற்றி 42 மீட்டர் உயரத்தில் நான்கு மினார்கள் வெளிப்புறமாக சற்று சாய்த்து கட்டினர் கட்டிடக்கலை வல்லுநர்கள். அதாவது நிலநடுக்கம் போன்ற ஏதாவது ஒரு விபத்து ஏற்பட்டாலும் அந்த நான்கு மினார்களும் தாஜ்மஹால் மீது விழாமல் வெளிப்புறமாக விழும். மும்தாஜின் கல்லறையைச் சுற்றியும் சுவர்களில் புனித குர்-ஆனிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளை எழுத்து ஓவியமாக செதுக்குவதில் உலகிலேயே தலைசிறந்தவரை அழைத்து வாருங்கள் என்று பாதுஷா உத்தரவிட்டார். அவருக்கு பாரசீகத்தின் அமானாத் கான் என்ற கலைஞரின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது. ஆனால் அவரோ, எனது எந்த கலைத்திறன் ஆனாலும் அதில் எனது கையொப்பம் இடுவேன். இதிலும் எனது கையொப்பமிட அனுமதி இருந்தால் மட்டுமே நான் வருவேன். என்று கூறி விட, ஷாஜகானும் ஒப்புக்கொண்டார். இன்றைக்கும் தாஜ்மஹாலில் செதுக்கப்பட்டிருக்கும் ஒரே கையொப்பம் இந்த கலைஞருடையது மட்டுமே.

                      தாஜ்மஹால் வெளிப்புற கதவுகள் மீதும் சுவர்கள் மீதும் மதிப்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து வைரங்கள், வைடூரியர்கள், ரத்தின கற்கள், முத்து, பவளம், கோமேதகம் என அனைத்தையும் வரவழைத்து பதித்தார் ஷாஜகான். பிற்பாடு ஆங்கிலேயர் காலத்தில் இவை அனைத்தும் சுரண்டப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவ்வளவு அற்புதமிக்க ஒரு படைப்பை கண்ட ஆங்கிலேயர்களுக்கு இதை இடிக்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது. ஆனால் வைஸ்ராய் கர்சன் பிரபு மேல்கண்ட யோசனை எல்லாம் நிராகரித்து, தாஜ்மஹாலை பராமரிப்பதற்கான சட்டத்தை இயற்றினார். பின்னாளில் இதயம் வடிவமைத்த ஷாஜகானின் உடலும் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது. 

                            டெல்லி அரியணையில் அமர்ந்து ஆட்சி புரிந்த மன்னர்களில் பலர் வட இந்தியாவையே முழு இந்தியா என்று கருதினர். அந்த எல்லையைக் காப்பாற்றிக் கொள்வதே அவர்களுக்கு மிகப்பெரும் சவாலாக இருந்தது. சாம்ராஜ்யத்தை விஸ்தரிக்கும் எண்ணம் வந்த போதெல்லாம் முகலாய மன்னர்கள் மனதில் ஆப்கானிஸ்தானும், மத்திய ஆசியாவும் மற்றும்  மங்கோலியாவும் தான் கண் முன் வந்தன. தனது முன்னோடியான தைமூர், அரியணையில் அமர்ந்து ஆட்சி செய்த காபுல் நகரை கைப்பற்றுவதே முகலாயர்களுக்கு கனவாக இருந்தது. அதனால் தென்னிந்தியாவை பற்றி யோசிக்க அவர்களுக்கு நேரமில்லை. ஒரு சிலர் முயற்சித்தனர். அப்படி முயற்சித்த சிலரும் வட இந்தியாவையும் கோட்டை விட்டனர் என்பது வேறு விஷயம். ஆனால் ஷாஜகான் கனவு கண்டார். தனது பாட்டனார் அக்பரை விட மாபெரும் பேரரசாக திகழ வேண்டும் என்ற கனவை கொண்டார்.

                         தந்தை ஜஹாங்கீரும் தெற்கே உள்ள அகமத் நகர் எனும் சாம்ராஜ்யத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைத்து தீட்டிய திட்டங்கள் எதுவும் வெற்றி கொள்ளவில்லை. அகமத் நகர் தளபதி மாலிக் ஆம்பர் 1626 இல் இறந்தார். இதுதான் சமயம் என்று புரிந்து கொண்ட ஷாஜகான், தெற்கை நோக்கி படைகளை அனுப்பினார். ஒரு அமைச்சர் துரோகியாக மாறி கோட்டை கதவுகளை திறந்து விட்டதால் முகலாயர்கள் இங்கு வெற்றி கொடி நாட்டினர். ஒரு அமைச்சர் துரோகியாக மாறினால், மற்றொரு அமைச்சர் தளபதியாக மாறினார். மராட்டிய அமைச்சர்களிள் ஒருவரான ஷாஜி போன்ஸ்லே முகலாயர்களுக்கு எதிராக படை திரட்டி போரை தொடர்ந்து நடத்தினார் தனது அண்டை நாட்டின் உதவியை நாடினார். (இந்த மராட்டிய அமைச்சர் ஷாஜிக்கு ஒரு ஆறு வயதில் மகன் இருந்தான் அந்த மகனின் பெயர் சிவாஜி.) இருப்பினும் அவர்கள் போல் உதவி செய்யவில்லை இறுதிவரை சண்டையிட்டு, இறுதியில் சரணடைந்தனர் அகமத் நகர் சாம்ராஜ்யத்தினர். இந்த தெற்கு பிரதேசத்திற்கு தனது மூன்றாவது மகனான ஔரங்கசீப்பை கவர்னராக நியமித்துவிட்டு ஆக்ரா திரும்பினார் ஷாஜகான். நேர்மையும் கண்டிப்பும் மிகுந்த மிகச்சிறந்த நிர்வாகி என்று மக்கள் மனதில் பெயர் எடுத்தார் ஔரங்கசீப். இந்தப் பிரதேசத்தில் இருந்து மட்டும் வரி வசூலாக டெல்லிக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் அனுப்பி வைத்தார். சிறிது நாட்களில் தனது அமைச்சரவையில் இருக்கும் ஒரு அமைச்சரின் மகளுக்கு ஔரங்கசீப்பை திருமணம் செய்து வைத்தார் பாதுஷா ஷாஜகான். அவரின் பெயர் தில்ரஸ் பானு பேகம்.

                      சில ஆண்டுகளில் ராஜ குடும்பத்தில் ஒரு பிளவு ஏற்பட்டது. தந்தைக்கும் மகனுக்கும் இடையில்... சரியான காரணம் எதுவும் சொல்லாமல் கவர்னர் என்ற பதவியில் இருந்து ஔரங்கசீப் நீக்கப்பட்டார். அவருக்கு மாத மாதம் வழங்கப்பட்ட தொகையும் நிறுத்தப்பட்டது. இதற்கு பல்வேறு ஊகங்கள் சொல்லப்பட்டாலும் உண்மையான காரணமாக இருந்தது ஷாஜகானின் மூத்த மகன் தாரா ஷூகோ. பல விதங்களில் மென்மையானவரும் படிப்பாளியும் ஆன தாரா தம்பியிடம் மட்டும் வெறுப்பை காட்டினார். பதிலுக்கு தம்பியும் அண்ணனை வெறுத்தார்.   அரசியலில் முயற்சி பெற்ற ஷாஜகான் குடும்ப விஷயத்தில் ராஜதந்திரம் இல்லாமல் ஏன் இவ்வாறு நடந்து கொண்டார் என்று யாருக்கும் புரியவில்லை தன் தந்தையான ஜஹாங்கிற்கு எதிராக தான் கிளர்ச்சியில் இறங்கியதை ஷாஜகான் மறக்கவில்லை. அதே கதை, அதே வரலாறு தன் விஷயத்திலும் மறுபடியும் தன் மூன்றாவது மகனால் மீண்டும் எழுதப்படலாம் என்று ஷாஜகானின் மனதில் இருந்திருக்கலாம். தனது மூத்த மகனான தாராவை தன் அருகிலேயே வைத்துக் கொண்டு பாசத்துடனும் ராஜ மரியாதையுடனும் நடத்தினால் தனக்குப் பிறகு ஆட்சி மாற்றம் மென்மையாக நடைபெறும் என்று பாதுஷா நினைத்திருந்தார். ஆனால் தாராவின் மனதில் தம்பி ஔரங்கசீப் போர்க்களங்களில் தொடர்ந்து வெற்றி பெறுவது கவலையில் ஆழ்த்தியது. அந்தக் கவலை ஏற்படுத்திய அச்சம், தன் தம்பி மீது தவறான கண்ணோட்டத்தை தந்தை மனதில் கொஞ்சம் கொஞ்சமாக புகுத்த ஆரம்பித்தார் தாரா. தன் மூத்த மகன் மீது இருந்த பாசத்தால் ஷாஜகான் அறிவை மறந்தார். ஒரு விஷயத்தை பாதுஷா ஷாஜகான் அடியோடு யோசிக்க மறந்து போய்விட்டார்.

                              நடந்தது என்னவென்றால், சக்கரவர்த்தி செல்லமாக தன்னுடன் அரண்மனையில் ராஜபோக மரியாதையுடன் நடத்திய தாராவுக்கு வெளி உலகின் கரடு முரடுகள் தெரியாமல் போனது. அதே சமயம் நாட்டின் பல மூளைகளுக்கு பந்தாடப்பட்ட இளைய மகன் ஔரங்கசீப் உடலில் உரம் பாய்ந்தது. உள்ளத்தில் உறுதி பிறந்தது. அதோடு போர்க்கள அனுபவமும் இருந்தது. இவை எல்லாம் ஒரு சேர கிளர்ந்து எழுந்தது. இதுவே ஷாஜகானுக்கு இறுதி கட்ட எமனாக அமைந்தது.    

                 மனைவி மும்தாஜ் மறைந்ததிலிருந்து பாதுஷா ஷாஜகானுக்கு போதாத காலம் தொடங்கி விட்டது என்று கூறலாம். மகன்களுக்கு இடையே இருக்கும் பிரச்சனை போதாது என்று இயற்கையும் ஷாஜகானுக்கு எதிராக அமைந்தது. 1632 இல் குஜராத்தையும் தட்சிண பிரதேசங்களையும் பஞ்சம் பிடித்தது. பசியை தாங்க முடியாமல் ஒரு துண்டு ரொட்டிக்கு மக்கள் எதையும் தர தயாராக இருந்தனர். ஆனால் ரொட்டி தர தான் ஆள் இல்லை. ஒரு வாய் சாப்பாட்டுக்கு தன் பதவியையும் விட்டுத் தர பலர் தயாராக இருந்தனர். நாட்டின் பல மூலைகளில் மக்கள் நாய்களைப் போன்று சாப்பிட்டனர் இன்னும் சில இடங்களில் பலவீனமான மனிதர்கள் இறைச்சிக்காக கொல்லப்பட்டனர். பஞ்சத்தில் இருந்து பிரதேசங்களை மீட்க டெல்லிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தானையும் மத்திய ஆசியாவையும் கைப்பற்ற வேண்டும் என்ற கனவு தன் வாழ்நாளில் நடக்காது என்பதை ஷாஜகான் புரிந்து கொண்டார். 

                     இருப்பினும் காபுலுக்கு 200 மயில் தொலைவில் உள்ள பட்டாக்ஷான் எனும் நகரை கைப்பற்ற முடிவு எடுத்தார் பாதுஷா. ஆதலால் 50,000 குதிரை படை வீரர்கள் மற்றும் ஒரு லட்சம் காலாட்படை வீரர்கள் கொண்ட படையை இரண்டாவது மகன் முராத் தலைமையில் அனுப்பினார் ஷாஜகான். கடினமான மலைத்தொடர்களை கடந்து அங்கு சென்று சேர்வதற்குள் படை சோர்ந்து விட்டது. இருப்பினும் முகலாய படை அங்கு சிறு வெற்றிகளை குவித்தனர். ஆனால் இளவரசர் முராத் மிகவும் சோர்ந்து விட்டு போர்க்களத்தில் இருந்து வெளியேறி அரண்மனைக்குச் செல்ல வேண்டும் என்று எண்ணி தந்தையிடம் அனுமதி கேட்டார். தந்தை அனுமதி தராத போதிலும் தான் எண்ணியதை செய்தார் இளவரசர் முராத். உடனே அங்கிருக்கும் படையை வழிநடத்திச் செல்ல குஜராத்தில் இருந்த இளவரசர் ஔரங்கசீப்புக்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இது குளிர் காலமாக அமைந்தது. இந்திய சீதோசன நிலைமையில் பழக்கப்பட்டிருந்த முகலாயர்களால் அங்கிருக்கும் குளிரை தாங்க முடியவில்லை. ஔரங்கசீப் எவ்வளவு முயற்சித்து திறமையுடன் போரிட்டாலும் வெட்ப நிலை மாற்றத்தால் வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இதை உணர்ந்து கொண்ட பாதுஷா, படையை திரும்ப அழைத்துக் கொண்டார். இருப்பினும் பழைய நாட்டு வீரர்கள் ஔரங்கசீப்  வீரத்தை நன்றாக புரிந்து கொண்டனர். அதற்கு ஒரு உதாரணமாக ஒரு நாள் போர்க்களத்தில் தொழுகை நேரம் வந்தபோது எந்தவித அச்சமும் இல்லாமல் இளவரசர் ஔரங்கசீப் தன் குதிரையை விட்டு கீழே இறங்கி போர்க்களத்திலேயே, மற்ற வீரர்கள் தன்னை சுற்றி இருக்கும் வேளையிலேயே தொழுகை செய்தார். இவருக்கு இருந்த இந்த மன தைரியத்தையும் வீரத்தையும் புரிந்து கொண்ட எதிரி நாட்டு தளபதி அவரை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வீரர்களுக்கு கண்ணசைவு மூலம் கட்டளை இட்டார். 

                          இந்தப் போருக்கு மட்டும் 12 கோடி ரூபாய் செலவானது. இது முகலாய அரசின் வருமானத்தில் பாதிக்கும் மேல். ஆதலால் ஒரு வழியாக முகலாயர்கள் வடக்கு பக்கம் செல்லும் திட்டங்களை முடிவாக மூட்டை கட்டி வைத்தார்கள். இரண்டாவது முறையாக ஔரங்கசீப் தட்சிணப்  பிரதேசத்திற்கு கவர்னராக நியமிக்கப்பட்டார். ஆனால் இந்த முறை தந்தைக்கும் மகனுக்கும் இடையில் இடைவெளி மிகவும் அதிகமாயிருந்தது. கவர்னர் என்ற முறையில் ஔரங்கசீப் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் மத்தியில் உள்ள டெல்லி அரசால் நிராகரிக்கப்பட்டது. நிதி தேவை குறித்து ஔரங்கசீப் அனுப்பும் கடிதங்கள் குப்பைத் தொட்டியில் போடப்பட்டன. இத்தனை சோதனைகளுக்கும் நடுவில் தெற்கே ஔரங்காபாத் எனும் நகரை உருவாக்கி மிகச் சிறப்பாக நிர்வகித்து வந்தார் ஔரங்கசீப். சில ஆண்டுகளில் மொகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் கட்டும் இரண்டு சிறு ராஜ்யங்கள் போர்க்கொடி உயர்த்தின. அந்த இரண்டு ராஜ்ஜியங்களையும் ஒட்டுமொத்தமாக கைப்பற்ற ஔரங்கசீப்  முடிவெடுத்தார். அதை அவரால் மிக எளிமையாக செய்திருக்க முடியும். ஆனால் அதை அவர் செய்வதற்குள் டெல்லியில் இருந்து தடைகள் வந்தன. பொறுமை இழந்த ஔரங்கசீப் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் நேரம் வந்தது.

                        தலைநகரில் இருந்து தந்தை பாதுஷாவும், அண்ணன் தாராவும் இணைந்து தொடர்ந்து ஏற்படுத்தி வரும் தொல்லைகளை இனி பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஔரங்கசீப்பைப் பார்த்து விதி புன்னகைத்து கண் சிமிட்டியது. ஒரு தூதுவன் வந்தான் "சக்கரவர்த்தி ஷாஜகான் திடீரென்று நோய்வாய்ப்பட்டு கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்" என்றான். ஔரங்கசீப் புன்னகைத்துக் கொண்டே தன் இடையில் இருந்த வாளைத் தடவிக் கொடுத்தார். அவருக்கு தெரியும் இனி என்ன செய்ய வேண்டும் என்று.  

                                 நிர்வாகத்தை தற்காலிகமாக தனது மூத்த மகன் தாராவிடம் ஒப்படைத்து விட்டு ஆக்ராவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார் பாதுஷா. இந்த விஷயம் மற்ற மகன்களுக்கு தெரிய தேவையில்லை என்று எண்ணிய தாரா, நாட்டில் வேறு மூலைகளில் நிர்வாக பொறுப்புகளில் இருந்த மற்ற இளவரசர்களுக்கு இச்செய்தியை சொல்லவில்லை. இதுவே பிரச்சனையாகி போனது. வங்காளத்தில் கவர்னராக இருந்த ஷூஜா தானாகவே அங்கே ஒரு முடிசூட்டு விழாவை நடத்திக் கொண்டு, தானே அடுத்த பாதுஷா என்று கூறி படையை திரட்டி டெல்லி நோக்கி வந்தார். ஷூஜா வை தொடர்ந்து குஜராத்தில் நிர்வாகத்தில் இருந்த மற்றொரு மகன் முராத் அவசரமாக தன்னை மன்னராக அறிவித்துக் கொண்டு ஒரு படையுடன் தலைநகர் நோக்கி கிளம்பினார். தெற்கே தட்சிணப் பிரதேசத்தில் கவர்னராக இருந்த ஔரங்கசீப் நடப்பதை எல்லாம் கவனித்துக் கொண்டிருந்தார். சற்று விவேகமாக செயல்பட நினைத்த அவர், முராத்துடன் கூட்டணி அமைத்துக் கொண்டார். வேலை முடிந்தவுடன் ஒருவரை ஒருவர் கொன்று விட வேண்டும் என்று தங்கள் மனதிற்குள் முதலிலேயே திட்டம் போட்டுக் கொண்டனர். ஆக, முராத் மற்றும் ஔரங்கசீப் என இருவரும் குள்ளநரிகளே. தனியாகப் படை திரட்டி கொண்டு சென்ற ஷூஜாவை, டெல்லியின் பெரும் படை, தாராவின் மகன் சுலைமான் ஷூகோ தலைமையில் காசிக்கு அருகே மடக்கி விரட்டி அடித்தது. முராத் மற்றும் ஔரங்கசீப் கூட்டணி படையை டெல்லி படை உஜ்ஜயினி நகரின் அருகில் 1658 ஏப்ரல் 15 -இல் எதிர்கொண்டது. இதில்  டெல்லி படை தோற்று பின் வாங்க,  ஊக்கத்துடன் ஔரங்கசீப் முன்னேறினார். 

                             மகன்களை அழைத்து சமாதானம் பேச விரும்பினார் சக்கரவர்த்தி. ஆனால் நிலைமை கை மீறிப் போயிருந்தது. நானா?அல்லது ஔரங்கசிப்பா? என்று பார்த்து விடலாம் என மூத்த மகன் தாராவும் படையை திரட்டி கொண்டு கிளம்பினார். சண்டை வேண்டாம் என்று பாதுஷாவிடம் இருந்து அனைத்து மகன்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. நடப்பவை அனைத்தும் நன்மைக்குத்தான் என்று பாதுஷாவுக்கு பதில் கடிதம் அனுப்பினர் மகன்கள். இங்கு தான் விதி விளையாடியது. அரண்மனையில் தந்தையின் அரவணைப்பிலேயே வளர்ந்த மூத்த மகன் தாரா அனைத்து புத்தகங்களையும் படித்து அறிவாற்றல் மிகுந்தவராக விளங்கினார். அதில் எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு போர் அனுபவம் என்பது இல்லாமலேயே போனது. ஆனால் தன் தந்தையால் நாட்டின் பல்வேறு மூலைகளுக்கும் துண்டாடப்பட்ட ஔரங்கசீப் மற்றும் அவரது படையினர் பல போர்களில் ஈடுபட்டு போர் அனுபவமும், திறமையுடனும் இருந்தனர். இதைப் பற்றி யோசிக்க தாராவும் மறந்து போனார். பாதுஷாவும் மறந்து போனார். 

                  29, மே 1658 -ம் ஆண்டு ஆக்ரா அருகில் மிகப்பெரிய போர் நடந்தது. இதில் இளவரசர் முராத் உயிர் தப்பியதே பெரிய விஷயம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். அவருடைய போர் திறன் அவ்வளவே. போர்த் திறன் கொண்ட ஔரங்கசீப் முன்னால் புத்தகத்தை படித்துச் சென்ற தாராவால் ஈடு கொடுக்க முடியவில்லை. முடிவு- போரில் தோல்வி. அவமானத்தால்  அரண்மனையை விட்டு வெளியேறி வடக்கு புறமாக தப்பி ஓடினார் தாரா. டெல்லி கோட்டையை முற்றுகையிட்டார் ஔரங்கசீப். கோட்டையை ஒப்படைக்குமாறு உள்ளிருக்கும் பாதுஷா தந்தை ஷாஜகானுக்கு கடிதம் அனுப்பினார் ஔரங்கசீப். 

                              நானே தற்போதும் பாதுஷா என்பதை நினைவில் கொள் என பதில் அனுப்பினார் தந்தை. ஆனால் மகன், தந்தையை பற்றி நன்கு புரிந்து வைத்திருந்தார். அவர் மனதில் தன் மூத்த மகன் தாரா போரில்  வெற்றி பெற்று திரும்புவான் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார். ஆதலால் மீண்டும் ஒரு போருக்கு  ஏற்றவாறு தற்போது டெல்லி கோட்டை, முன் ஏற்பாடுகளுடன் இருக்காது என புரிந்து கொண்டார் ஔரங்கசீப். அரண்மனைக்குச் செல்லும் குடிநீர் வழியை மட்டும் அடைத்து விட்டார். மூன்று நாட்களுக்கு தேவையான குடிநீர் கையிருப்புக் கூட இல்லாமல் வேறு வழியின்றி மகன் ஔரங்கசீப் -இடம் சரணடைந்தார் தந்தை பாதுஷா ஷாஜகான். 

                           பாதுஷா என்கிற பட்டம் பறிபோன ஷாஜகானின் வாழ்வில் இன்னும் ஏராளமான துயரங்கள் காத்திருக்கிறது. ஆனால் ஷாஜகானின் சகாப்தம் இத்துடன் முடிந்தது. இனி ஔரங்கசீப் இன் வரலாறு தொடங்கும். தந்தை, சகோதர்கள் மற்றும் அவரது மகன்களை ஔரங்கசீப் என்ன செய்தார்? என்பதை இனி அவரது வரலாறு சொல்லும்.  

      

Comments

Popular posts from this blog

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Ways to reduce my Tax

UDYAM - Whether a boon or bane for MSMEs