இந்தியாவின் கதை : அக்பர்

                                                                 தான் செய்த அனைத்து தவறுகளையும் மாமன்னர் அக்பரை இந்த உலகிற்கு பெற்றுத் தந்ததன் காரணமாகச் சரி செய்துவிட்டார் ஹூமாயூன் என்றால், அது மிகையல்ல. இறந்த பிறகு மூன்று நாட்களுக்கு அந்த செய்தி மக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை. ஏனென்றால் இளவரசர் அக்பர் தொலைதூரத்தில் பஞ்சாப் பிரதேசத்தில் போர்க்களத்தில் சண்டையிட்டுக் கொண்டிருந்தார். தடி எடுத்தவர்கள் அனைவரும் தண்டல் காரர்கள் ஆவதும், முதுகில் குத்துபவர்கள் எல்லாம் மாமன்னர்கள் ஆவதும் அக்காலத்தில் மிக சாதாரணமாக இருந்ததால் தனயனுக்குத் தகவல் சொல்லி தயார்படுத்தும் நிலைமை வரும் வரை இதை மிக ரகசியமாக வைத்தனர். ஹூமாயூன்  போல தோற்றமளித்த ஒருவருக்கு அரச உடை அணிவித்து உப்பரிகையில் மங்கலான வெளிச்சத்தில் அமரவைத்து மக்களுக்கு கையசைக்க வைத்து மாமன்னர்  ஹூமாயூன் உயிரோடு இருப்பது போன்ற பிம்பத்தை ஏற்படுத்தி வைத்தனர். 

ஷெர்ஷாவின் வழிவந்த சிக்கந்தர்ஷா ஹூமாயூனோடு போராடி தோற்ற பிறகு, பஞ்சாபில் தஞ்சம் புகுந்து மறுபடியும் படைதிரட்டி போருக்கு வந்ததால் இளவரசர் அக்பர் மற்றும் தளபதி பைராம் கான் ஆகியோரின் தலைமையில் படையை அனுப்பி இருந்தார் ஹூமாயூன். சிக்கந்தர் ஷாவை நெருங்கும் வேளையில் தந்தை இறந்த செய்தி கேள்விப்பட்ட அக்பர் சற்று மனம் தளர்ந்தார். தகவல் கேட்டதும் பைராம் கான் துரிதமாக செயல்பட்டு போர்க்களத்திலேயே ஒரு மேடை அமைத்து உடனே இளவரசர் அக்பருக்கு டெல்லி சுல்தானாக பட்டம் சூட்டினார். தான் டெல்லிக்கு திரும்பி பொறுப்பேற்கும் வரை தார்தி பெஹ்கான் என்பவரை டெல்லிக்கு ஆளுநராக பைரம் கானின் ஆலோசனையின்பேரில் அக்பர் நியமித்தார்.


ஆனால் ஹேமு என்ற ஒரு அடிமையால் டெல்லி அரியாசனத்திற்கு ஆபத்து வந்தது. தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்து, அடிமையாகி வாழ்க்கையை ஆரம்பித்து, வியாபாரியாய் மாறி ஷெர்ஷாவின் நண்பனாகி, பிறகு பிரதம தளபதியாகி பின் ஷெர்ஷாவின் வம்சம் சிதறிப் போன பிறகும் ஒரு பெரிய படையுடன் காத்திருந்த ஹேமு இதுதான் தருணம் என்று டெல்லியை முற்றுகையிட்டார். ஹூமாயூன் உடல் மண்ணுக்கடியில், இளவரசர் அக்பரும் பஞ்சாபில்... இந்த இக்கட்டான சூழ்நிலையில் டெல்லி கோட்டையின் வாசலில் போர் தொடங்கியது. உச்சகட்ட போர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது பதுங்கியிருந்த ஹேமுவின் யானைப்படை வெளிவந்து அனைவரையும் மிரள வைத்தது. மொகலாயர்களுக்கு இறுதிவரை யானைப்படை மீது இருந்த பயம் மட்டும் அகலவே இல்லை. மீதமிருந்த மொகலாயப் படை ஓட்டம் பிடிக்க, டெல்லி அரியணையில் அமர்ந்தார் ஹேமு. இச்செய்தி அக்பரை வந்தடைந்தபோது சிலர் காபூலுக்கு செல்ல ஆலோசனை தந்த போதும் அக்பர் சற்று நிதானமாக சிந்தித்து யார் இந்த ஹேமு என அறிந்து கொண்டு, வாருங்கள் டெல்லி நோக்கி சென்று அவரை வெல்லலாம் என்று கூற, பைராம் கானின் முகத்தில் புன்னகை கலந்த பெருமிதம். 

நவம்பர் 5, 1556 -இல் தாத்தா பாபர் வெற்றிக் கொடி நாட்டிய அதே பானிபட் கிராமத்தில் அக்பர் படையும் ஹேமுவின் படையும் மோதிக் கொண்டது. போர் மிகவும் பரபரப்பாக நடந்து கொண்டிருக்க மிக இக்கட்டான சூழ்நிலையில் தளபதி பைராம் கானின் வியூகத்தின் படி மொகலாயப் படை குதிரை வீரர்கள் ஹேமுவின் யானையை சுற்றி வளைத்து அம்புகளை விட்டு, யானையைக் கொன்று வீழ்த்தி, ஹேமுவை சிறை பிடித்தனர். போர் முடிவிற்கு வந்தது. இவரால் பிற்காலத்தில் பிரச்சனை வரக்கூடாது ஆதலால் ஹேமுவின் தலையை சீவ சொல்லி அக்பருக்கு பைராம் கான் அறிவுறுத்தினார். ஆனால் அதற்கு அவருக்கு மனம் இல்லை அதனால் பைரம் கானே தலையை சீவினார். இதுதான் திரையில் வெளிவந்த "ஜோதா அக்பர்" என்ற திரைப்படத்தின் முதல் காட்சியாக அமைந்திருக்கும். பிறகு ஹேமுவின் 1500 யானைகளும் அக்பர் படையுடன் இனைய, டெல்லி கோட்டைக்குள் கம்பீரமாக நுழைந்தார். டெல்லிக்கு நுழைந்தவுடன் முதல் வேலையாக பைரம்கான் செய்தது என்னவென்றால் தோற்று ஓடிய படைக்கு தலைமை தாங்கிய அந்த ஆளுநரின் தலையை சீவியது தான்.

                 இப்படி பல காரியங்களில் தன்னிச்சையாக முடிவெடுத்து செயல்படுத்திய பிறகு மன்னரிடம் தகவல் மட்டும் சொல்லும் பழக்கம் அக்பருக்கு சற்று தர்மசங்கடமாக இருந்தது. மன்னருக்கும் தளபதிக்கும் இருந்த இந்த மனப்பான்மையை அந்தப்புரத்தில் இருந்த ஒரு பெண்மணி புரிந்து கொண்டார். அவரது பெயர் மஹாம் அங்கா. சிறுவயதில் அக்பருக்கு செவிலித் தாயாக இருந்து வளர்த்தவர் இவர்தான். அதனால் தன் தாயை விட இவர் மேல் மிகுந்த அன்பு வைத்து இருந்தார் அக்பர். இதை பயன்படுத்திக் கொண்ட மஹாம் அங்கா தற்போது அக்பரின் மனதில் நஞ்சை விதைக்க  ஆரம்பித்தார். அக்பரும் அரசவையில் பெரும்பான்மையானோர் சன்னி பிரிவை சார்ந்த முஸ்லிம்கள். ஆனால் பைரம்கான் ஷையா பிரிவைச் சார்ந்த முஸ்லீம். தற்செயலாகவோ ஷையா பிரிவைச் சார்ந்த ஒரு முஸ்லிமை ஆஸ்தான குருவாக பைராம் கான் நியமித்திருந்தார். இதை சுட்டிக்காட்டி பைராம் கான் அரசவையில் பெரும்பான்மை அடைய திட்டம்போட்டு அரியணையை கைப்பற்ற முயற்சிக்கிறார் என்று அக்பரின் மனதில் நஞ்சை விதைத்தார். அக்பரும் அதுபற்றி சிந்தனை செய்ய ஆரம்பித்தார். ஏனென்றால் பைரம் கானின் வீரம் அத்தகையது. சில நாட்கள் கழித்து பைராம் கான் தளபதி பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாகவும் அவர் புனித யாத்திரைக்காக மெக்கா செல்ல அனைத்து ஏற்பாடுகளும் அரசு சார்பாக உத்தரவிடப்பட்டது இறுதி நிமிடத்தில் கூட அக்பரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கூட பைரம் கானுக்கு தரப்படவில்லை சற்று தளர்ந்த மனதுடன் நாட்டை விட்டு சென்றார் வீர தளபதி. ஆனால் சிறிது நாட்கள் கழித்து செல்லும் வழியிலேயே பைராம்கானின் மனம் மாறியது. தனது வீரத்தை வெளிப்படுத்த நினைத்த அவர் ஒரு சிறிய படை திரட்டி அக்பரின் படையுடன் போருக்குச் சென்றார். போரில் தோல்வியுற்று அக்பரிடம் கைதியாக அழைத்துவரப்பட்டார். இருவரும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினர். பைராம் கானை தன்னருகில் அமரவைத்து உங்களுக்கு இப்பொழுது என்ன வேண்டும்? வீரத்தை காண்பிக்க வேண்டும் என்றால், இந்தியாவில் நம் வழிக்கு வர வேண்டிய தேசங்கள் பல உள்ளன. அவற்றிடம் சென்று வீரத்தை காண்பியுங்கள் அல்லது புனித யாத்திரை செல்ல வேண்டும் என்றால் அதற்கும் ஏற்பாடு செய்கிறேன் அல்லது நிம்மதியான வாழ்க்கை வேண்டுமென்றால் இந்த கோட்டையிலேயே என்னுடனே தங்கிக் கொள்ளலாம் என்று அக்பர் கூற, பைராம் கான் மனதளவில் உடைந்து போனார். மாமன்னர் அக்பரின் நம்பிக்கையை இழந்த பிறகு நான் இங்கு இருக்க இருக்க விரும்பவில்லை. ஆதலால் புனித யாத்திரை செல்ல விரும்புகிறேன் என்று கூற, அக்பரும் அதற்கான வசதிகள் செய்து கொடுத்து ஆண்டுதோறும் 50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க உத்தரவிட்டு, பைராம்கானை அரசு மரியாதையுடன் புனித யாத்திரைக்கு வழி அனுப்பி வைத்தார். ஆனால் செல்லும் வழியில் ஒரு போரில் பைராம்கானால் உயிரிழந்த ஒருவரின் மகன் கையால் அவர் கொல்லப்பட்டார். 

                   பாட்டனார் பாபரின் கண்டிப்போடு பைராம்கானின் உறவை முறித்துக் கொண்டாலும், தந்தை ஹூமாயூனின் சாத்வீக குணமும் மாமன்னர் அக்பரிடமிருந்தது. பைராம்கானின் குடும்பத்தை அரண்மனையிலேயே வைத்து மிக நன்றாக பார்த்துக் கொண்டார். அவரது மகனான அப்துல் ரஹீமிற்கு பாதுகாவலராகவும் இருந்து, பின்னாளில் அவர் ஒரு மிகச்சிறந்த பிரபுவாக ஆனதற்கு அக்பர் உறுதுணையாக இருந்தார். ஆனால் பைராம்கானின் மறைவிற்குப் பிறகு அரண்மனைக்குள் நடக்கும் அரசியலை சமாளிக்க அக்பர் சற்றுச் சிரமப் பட்டார் என்பது உண்மையே. அரண்மனைக்குள்ளேயே நிறையச் சதித்திட்டங்கள், அக்பரை ஒரு கைப்பாவையாக மாற்ற நிகழ்த்தப்பட்டன. அதற்கு தலைமை தாங்கியவர் செவிலித்தாய் ஆன மஹாம் அங்கா.  பைராம்கான் இருந்த இடத்திற்கு தனது மகனான ஆதம்கானை கொண்டு வர விரும்பினாள். ஆரம்பகட்டத்தில் குழப்பம்  இருந்தாலும் செவிலித்தாய் வேண்டுகோளுக்கிணங்க, ஆதம் கானை ஒரு தளபதியாக நியமித்தார் அக்பர். மேலும் படையின் ஒரு பிரிவை ஆதம் கானின் தலைமையின் கீழ் மால்வா பிரதேசத்துக்கு அனுப்பினார்.

                       மால்வா பிரதேசத்தை ஆண்டு வந்த பஸ்பகதூர் ஓர் உல்லாச பேர்வழி. அந்தப்புரத்திலேயே அரசவை நடத்தியவர். முகலாயப் படை தன்னை நெருங்கி வரும் வரை அவருக்கு செய்தி வரவில்லை. இறுதி நேரத்தில் அனைத்து படை வீரர்களையும் திரட்டி போர் செய்து, டெல்லி படையை வெல்வது என்பது நடக்காத விஷயம். ஆதலால் நடந்த போரில் ஆதம் கான் தலைமையிலான முகலாயப் படை வெற்றி பெற்ற உடனேயே ஆதம் கான் கேட்டது அந்தப்புரத்து அழகிகள் எங்கே?? என்பதுதான். போரில் தோற்ற பஸ்பகதூரை துரத்தி செல்ல கூட ஆதம் கான் விரும்பவில்லை. ஆனால் அதற்குள் மால்வா நாட்டு வீரர்கள் பல அந்தப்புரத்து பெண்களை கொன்று விட்டார்கள். இதனால் கோபமடைந்த ஆதம் கான் அனைவரையும் வெட்டி வீச உத்தரவிட்டான். இரத்த ஆறு ஓட, பல தலைகள் உருள, சிரித்தபடி மதுபானம் அருந்தி கொண்டிருந்தார். இந்த வெற்றிக்குப் பிறகு ஆதம் கானின் ஆசைகள் அதிகரித்தன. தான் கைப்பற்றிய செல்வங்கள், யானைகள், பரிசுப் பொருட்கள், அழகிய பெண்கள் என அனைத்தையும் தானே வைத்துக் கொண்டான். இந்த செய்தி அக்பருக்கு போய் சேர, முழுமையான முகலாயப் படையுடன் அக்பரே கிளம்பி வந்தார். கூடவே மஹாம் அங்காவும் தொற்றிக் கொண்டாள். மால்வா கோட்டைக்குள் திடீரென்று பிரவேசித்த அக்பரால் பதறிப்போன ஆதம் கான், உடனே அவரது காலில் விழுந்து, தானே டெல்லி வந்து அனைத்தையும் ஒப்படைக்க தயாராகிக் கொண்டிருந்தேன் என்று மழுப்பினான். ஆனால் அதை அக்பர் நம்பவில்லை. இருப்பினும் எரிச்சலோடு இதை விட்டுவிட்டார். மால்வா பிரதேசத்திற்கு ஆளுநராக மற்றொரு தளபதியை நியமித்து விட்டு, ஆதம் காணை தன்னோடு டெல்லிக்கு அழைத்துச் சென்றார். ஆளுநராக நியமிக்கப்பட்ட அந்த தளபதி சரியாக ஆட்சி செய்யாமல், அருகிலுள்ள சிறு சிறு ஊர்களைத் தாக்கி மக்களை தொந்தரவு செய்தது, முதல் போரில் தப்பி ஓடிய  பஸ்பகதூருக்கு சாதகமாக போனது. அருகிலுள்ள சிற்றரசு மன்னர்களை எல்லாம் ஒன்று திரட்டி மீண்டும் ஒரு படை திரட்டி மீண்டும் மால்வா பிரதேசத்திற்கு மன்னரானார். இதனால் கோபமடைந்த அக்பர் மீண்டும் ஒரு படை அனுப்பினார். இந்தமுறை தெளிவான வெற்றி பெற்றது முகலாயப் படை. மன்னிப்பு கோரினார் பஸ்பகதூர். அதனால் அக்பரின் அரசவையில் ஒரு செல்வாக்கு மிக்க பிரபுவாக கடைசி காலம் வரை வாழ்ந்து மறைந்தார்.

                      ஆக்ரா வந்து சேர்ந்த அக்பர், காபூலில் தன் தந்தையின் நண்பரான அட்கா கான் என்ற ஒரு அறிஞரை வரவழைத்து பிரதம அமைச்சராக நியமித்தார். தன் ஆலோசனை இல்லாமல் நடந்த இந்த நியமனத்தால் சற்று கலக்கம் கொண்டாள் மஹாம் அங்கா. கிபி 1562 ஆம் ஆண்டு பிறந்தது. இந்தப் புத்தாண்டு அக்பரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், முகலாய ஆட்சியிலும் கூட ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது. இந்தத் திருப்பம் ஏற்படுத்திய விளைவுகள் சரித்திரப் புகழ் பெற்றன. ஆஜ்மீரில் இருந்த ஒரு ஞானியின் கல்லறைக்கு அக்பர் சென்றிருந்தார். அருகிலிருந்த ஜெய்ப்பூருக்கும் மாமன்னர் அக்பர் வருகை தர, ராஜபுத்திர மன்னர் அவரை மிகுந்த மரியாதையுடன் வரவேற்றார். அப்போது மன்னர் அக்பரும் ராஜபுத்திர மன்னரின் மகளும் கண்ணோடு கண் நோக்க, அது திருமணத்தில் போய் முடிந்தது. இளவரசியின் தம்பியான பகவான்தாஸ் அக்பரின் அரசவையில் ஒரு அமைச்சரானார். முதன்முதலாக முகலாயர்களும் ராஜபுத்திரர்களுக்கும் இடையே திருமண பந்தம் நடந்தது. இவர்களுக்கு இடையேயான உறவும் துளிர் விட ஆரம்பித்தது இப்போதுதான். இவர்களுக்கு மகனாய் பிறந்தவர் தான் வருங்கால மன்னரான ஜஹாங்கீர். 

வர வர அக்பர் தன் பிடியிலிருந்து நழுவுவதை உணர்ந்த மஹாம் அங்கா, பிரதம அமைச்சரைத் தீர்த்துக் கட்டிவிட்டு அந்த இடத்திற்கு தனது மகனை பரிந்துரைக்க முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த விஷயத்தில் தாயை விட மிகவும் அவசரப்பட்டான் ஆதம் கான். ஒரு நாள் தொழுகையில் இருந்தபோது பிரதம அமைச்சரை அவரது அறையிலேயே வைத்து கொலை செய்தான். மன்னரிடம் கையும் களவுமாக சிக்கி கொண்டான். தன் தந்தைக்கு இணையான இடத்தில் வைத்திருந்த பிரதம அமைச்சரான அட்கா கானை, ஆதம்கான் கொலை செய்ததும் அக்பருக்கு கோபமும், வெறியும் வந்தது. உடனே தன் இடையிலிருந்த வாளை உருவினார். ஆனால் தான் ஒரு அரசன் என்பது நினைவுக்கு வந்தவுடன், வாளை உள்ள வைத்துவிட்டு ஆதம் கானை அடித்தே வீழ்த்தினார். பிறகு வீரர்களை அழைத்து, ஆதம்கானின் உடலை கோட்டையின் மாடிக்கு தூக்கிச் செல்ல வைத்து அங்கிருந்து கீழே தூக்கி போட்டு கொலை செய்ய உத்தரவிட்டார். இதன்பிறகு மஹாம் அங்கா பித்து பிடித்தது போல ஓர் இருட்டறையில் துவண்டு போனார்.  பிறகு மே மாதம் - 1562 இல் இறந்தும் போனார். அதன் பிறகு அக்பருக்கு மிக நெருக்கமானவர்கள் கூட அவரிடம் வாலாட்டாமல் நடந்து கொண்டனர். இதற்குப் பிறகு இந்த மாதிரி இடையூறுகள் இல்லாமல் அக்பரின் ஆட்சி கம்பீரமாக ராஜபாட்டையில் பயணிக்கத் தொடங்க போகிறது.  அக்பரோடு நேரடியாக மோத ராஜபுத்திர வீரர்கள் சிலரும் ஒரே ஒரு வீராங்கனையும் மட்டுமே இருந்தனர்.

                      இந்திய மண்ணில் எத்தனையோ அந்நியப் படையெடுப்பு நடந்திருந்தாலும் யாராலும் ராஜபுத்திர வம்சத்தை மட்டும் முழுவதுமாக வழிக்குக் கொண்டுவர முடியவில்லை, பூண்டோடு அழிக்கவும் முடியவில்லை என்பது வரலாற்று உண்மைகளில் ஒன்று. சிறுவயதிலிருந்தே தன் இனத்தின் வீரத்தை பெருமையாக இரத்தத்தோடு இரத்தமாக கலந்து வளர்ந்தவர்கள் இராஜபுத்திரர்கள். "வெற்றி அல்லது வீர மரணம்" என்பதையே தங்கள் இலட்சியமாக கொண்டவர்கள். பல ஆண்களை போலவே ராஜபுத்திர பெண்களும் போர்க்களத்தில் வாளேந்தி போரிட்ட நிகழ்வுகளும் ஏராளம் உண்டு. இப்படி யாருக்குமே வளைந்து கொடுக்காத ராஜபுத்திரர்களை வழிக்கு கொண்டு வந்த முதல் முகலாய மன்னர் அக்பர் என்று சொன்னால், அது மிகையல்ல. இதற்காக அக்பர் மேற்கொண்ட யுத்தம் சற்று வித்தியாசமானது. "அன்பு யுத்தம்". ஆம்... ராஜபுத்திர அரசர்களை மாமன்னர்களாய் ஆக்கிவிடுகிற அன்பு யுத்தம் அது. ராஜபுத்திர மன்னர்களின் மகள்களை திருமணம் செய்து கொண்டார் அக்பர். அக்பரின் "ராஜபுத்திர மனைவி லிஸ்ட்" மட்டும் மிக நீளமானது.

                     ஆனால் மத்தியப் பிரதேசத்தை ஆண்டுவந்த ராஜபுத்திர ராணி துர்காவதி, அக்பரின் வழிக்கு கடைசி வரை வரவில்லை. பல யுத்தங்களில் நேரடியாகப் போரிட்டு, அனைத்து போரிலும் வென்றவர் இந்த ராணி துர்காவதி என்பது குறிப்பிடதக்கது. ராணியிடம் பெரும் காலாட் படையோடு, 20 ஆயிரம் குதிரை வீரர்களும், ஆயிரம் யானைகளும் இருந்தன.  மேலும் துர்காவதிக்கு துப்பாக்கியை குறிபார்த்து இயக்க தெரியும். ஆம்...  மாமன்னர் பாபருக்குப் பிறகு துப்பாக்கி கலாச்சாரம் வட இந்தியாவில் பரவியது. ஆனால் இந்த முறை அக்பர் நேரில் வராமல் திறமைவாய்ந்த தளபதி அஸாம்கான் தலைமையில் ஒரு பெரும் படையை அனுப்பினார். கி.பி. 1564 இல் நடந்த இந்த உக்கிரமான யுத்தத்தில் தளபதி எய்த அம்பு ராணியின் இடது தோள்பட்டையில் குத்திக் கிழித்தது. தோல்வி நிழல் தன் மேல் படர்வதை உணர்ந்த ராணி துர்காவதி, தன் கையில் வைத்திருந்த குறும் வாளை எடுத்து  தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.  இப்போது முகலாயப் படை கோட்டைக்குள் நுழைந்தது. பத்து நாட்கள் செலவிட்டும் கொள்ளையடித்த செல்வத்தை கணக்கிட முடியவில்லை என்பது செய்தி. 

                         புகழின் உச்சிக்கு செல்ல அக்பருக்கு விதி, மலர் பாதையை தரவில்லை. மாறாக, முள் பாதையை தந்தது. அதில் அக்பர் தன் வாழ்நாளில் அதிகப்படியான நாட்களை போர்க்களத்திலேயே சந்தித்தார். இப்படித்தான் ஒரு அரசன் இருக்க வேண்டும். அரசன் என்பவன் அரியணையில் அமர்ந்து ஓய்வெடுக்க கூடாது. தன் சாம்ராஜ்ஜியத்தின் எல்லைகளை விஸ்தரிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் நிதி நிலை அதிகரிக்கும், மக்களின் வாழ்க்கை தரம் உயரும் என்று அக்பர் கருதினார். யுத்தம் இல்லாத நாட்களில் அக்பர் பொழுதுபோக்கிற்காக வேட்டையாட காட்டுக்கு செல்வார். அதுவும் சற்று வித்தியாசமாக செல்வார். அவர் வேட்டையாட செல்வதற்கு ஒரு பெரும் படை முன்னே செல்லும். அறுபது மைல் தொலைவில் உள்ள ஒரு காட்டை தேர்ந்தெடுத்து வீரர்கள் வட்டமாக சூழ்ந்து கொள்வார்கள். பிறகு ஆயிரக்கணக்கான வீரர்கள் இசை வாத்தியங்களால் ஒலியை எழுப்பிக்கொண்டே முன்னேறுவார்கள். வட்டத்தின் சுற்றளவு குறைந்து கொண்டே வரும். ஆயிரக்கணக்கான விலங்குகள் ஒரே இடத்திற்கு வந்து சேரும். 4 மைல் தொலைவு மட்டும் விட்டு வைத்துவிடுவார்கள். அதன் பிறகு அக்பருக்கு செய்தி சொல்லி அனுப்புவார்கள். அக்பரின் குதிரை அதன்பிறகு வட்டத்திற்குள் பிரவேசிக்கும். தனக்குப் போதும் என்ற நினைப்பு வரும் வரை அக்பர் வேட்டையாடுவார். அதன் பிறகு தளபதிகளுக்கும் வாய்ப்பளிக்கப்படும். ஐந்து நாட்கள் வரை அக்பர் வேட்டையாடியது உண்டு.  

                   இவ்வாறாக களத்திலும் காட்டிலும் வெற்றிகள் வந்தாலும், ராஜபுத்திர வம்சத்தின் பெருமையையும் வீரத்தையும் பறைசாற்றிக் கொண்டிருந்த ஒரு கோட்டை இன்னும் மீதம் இருந்தது. அதுதான் சரித்திரப் பிரசித்தி பெற்ற சித்தூர் கோட்டை.


மேவாரில் உள்ள புகழ்பெற்ற சித்தூர் கோட்டை சுமார் 800 ஆண்டுகளாக ராஜபுத்திர இனத்தின் வீரத்தின் உச்சகட்ட சின்னமாக விளங்கி வந்தது. அந்த கோட்டை அமைந்திருந்தது ஏடாகூடமான ஒரு மலை உச்சியில். கோட்டை வாயிலை அடைய, சுமார் இரண்டு மைல் தூரம் சரிவான கரடு முரடான மலை மீது ஏறிச் செல்ல வேண்டும். இதிலிருந்தே புரிந்து கொள்ளலாம், கோட்டையை நோக்கி பகைவர்கள் வரும்போது சித்தூர் கோட்டையிலிருந்து வரும் அம்பு மழையே எதிரிகளின் படையை அழித்துவிடும் என்பது. ஆனால் அக்பர் பாதுஷாவோ இந்த கோட்டையை கைப்பற்றிய ஆக வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். அதற்கு காரணம் இந்த கோட்டை தான் ராஜபுத்திர இனத்தின் சுதந்திர உணர்வை காலம் காலமாக பறைசாற்றிக் கொண்டிருந்தது. இந்த கோட்டையின் அரசர் ராணா உதய்சிங்.  ராஜபுத்திர இனத்தின் லட்சிய தலைவராக திகழ்ந்தார். மொகலாய சாம்ராஜ்ஜியத்தின் உன்னதமான தலைவராக அக்பர்  திகழ்ந்தார். அதனால் இந்த இரு மன்னர்களும் மோதிக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகிறது. 

கி.பி. 1567 அக்டோபர் 24 அன்று யுத்தம் ஆரம்பிக்கிறது. மொகலாயப் படையால் அம்பு மலையைத் தாண்டி மலை மீது ஏற முடியவில்லை. ஏராளமான மொகலாய வீரர்கள் இறந்து போயினர். இருப்பினும் அந்த மலையை மொகலாயப் படை சூழ்ந்து கொண்டிருந்தது. வெற்றி அல்லது வீர மரணம் என்பதையே தங்கள் லட்சியமாக கொண்ட ராஜபுத்திர வம்சத்தின் ராணா உதய் சிங்,  வீரம் காட்ட வேண்டிய நேரத்தில் கோழையாக மாறினார். கோட்டையை விட்டு தப்பிச்சென்று மறைவான இடத்தில் ஒளிந்து கொண்டார். இருப்பினும் கோட்டையைக் காக்க இரு தளபதிகள் தலைமையில் ஏழாயிரம் வீரர்களை பணியில் அமர்த்தி சென்றார். இதனால் ராஜபுத்திர வம்சத்தின் ஒரு களங்கமாகவே ராணா உதய் சிங் பார்க்கப்படுகிறார். அந்த இரு தளபதிகளும் வீரத்தோடு செயல்பட்டு சுமார் நான்கு மாதங்களாக மொகலாயப் படையை மலை மீது ஏற விடாமல் அதன் அடிவாரத்திலேயே இருக்கும்படி பின்தங்க வைத்தனர். அக்பர் சற்று சிந்தனை செய்ய ஆரம்பித்தார். அவரின் போர் தந்திரம், ராஜபுத்திர வம்சத்தின் வீரத்தை வெற்றிகொண்டது. அக்பர் மரம் மற்றும் கற்களால் ஆன நகரும் கோட்டை ஒன்றை உருவாக்கினார். இதனால் அதை முன்னால் வைத்து முன்னே நகர்த்திக் கொண்டே வீரர்கள் பின்னாலிருந்து முன்னேற முடியும். சித்தூர் கோட்டையிலிருந்து வரும் அம்புகள் அந்த நகரும் கோட்டையை தகர்க்க முடியாது. மேலும் ஓர் இரவில் அந்த இரு தளபதிகளில் ஒருவர் கோட்டையின் உச்சியில் மேல் ஆலோசனையில் ஈடுபட்டு இருந்தபோது அக்பருக்கு ஒரு அதிர்ஷ்டம் கிடைத்தது. அக்பர் தன் கைத்துப்பாக்கியை எடுத்து அந்த தளபதியை குறி பார்த்துச் சுட்டார். துப்பாக்கியில் இருந்து புறப்பட்ட ரவை, அந்த தளபதியின் நெற்றிப் பொட்டை துளைத்தது.  தளபதி கோட்டையின் மேலிருந்து கீழே விழுந்தார். ராஜபுத்திர வீரர்கள் திகைத்து போய் செய்வதறியாது நின்றனர். இருப்பினும் மற்றொரு தளபதி வீரத்துடன் செயல்பட்டு போருக்கு தயாரானார். ஆனால் விடியும் முன் சித்தூர் கோட்டை மொகலாயர் வசமானது சூரிய உதயம் அக்பரின் சார்பாக உதித்தது. அன்று இரவுக்குள் கோட்டையில் இருந்த அனைவரும் பரலோகத்திற்கு அனுப்பப்பட்டனர்.

சரித்திர வெற்றி பெற்று ஆக்ரா திரும்பினார் அக்பர். இருப்பினும் அவருக்கு ஏதோ ஒரு மனக்குறை இருந்தது. அது தான் வாரிசு இல்லாத குறை. இருப்பினும் அப்போது அவருக்கு வயது இருபத்தி ஏழு தான். தனது மனைவிகள் கர்ப்பம் தரித்த போதிலும் வாரிசு நிலையாக இல்லை. இதனால் அருகில் உள்ள சில மகான்களை சந்தித்து ஆசி பெற்றார். அப்படி ஒருவரை சந்திக்கும் போது அடுத்த முறை மனைவி கர்ப்பமாகும் போது அவர் இந்த ஊரில் வந்து தங்க வேண்டும் என்று அந்த மகான் கூறினார். அதே போல ஆகஸ்ட் 30, 1569 அன்று ஒரு மனைவி குழந்தையை பெற்றெடுத்தார். அந்த மகான் நினைவாக அவரது பெயரையே தனது மகனுக்கும் வைத்தார் அக்பர். "சலீம்" என்று அழைக்கப்பட்டது குழந்தை. இந்தக் குழந்தைதான் பின்னாளில் "ஜஹாங்கீர்" என்று அழைக்கப்பட்டு, அக்பருக்கு பிறகு மகுடம் சூட்டி கொள்ளப் போகும் இளவரசர். பின்பு 1570 இல் இரண்டாவது மகனாக முராத் உம்,  1572 இல் மூன்றாவது மகன் தானியேல் பிறந்தனர்.

அக்பர், ஒரு முறை கிருஷ்ணர் பிறந்த ஊரான மதுரா நகருக்கு வருகை தந்தார். அப்போது ஹிந்துக்கள் தங்கள் கடவுள்களை வழிபட, வரி கட்டுவதைப் பார்த்து திகைத்துப் போனார். தங்கள் மதத்தை பின்பற்றுவதற்கு அவர்கள் ஏன் வரி கட்ட வேண்டும்? என்ற கேள்வி அவருக்குள் எழுந்தது. ஆதலால் ஹிந்துக்கள் மதத்தின் சார்பாக கட்டிக் கொண்டிருந்த அனைத்து வரிகளையும் ரத்து செய்து அரசாணை வெளியிட்டார். இஸ்லாம் குருமார்களுக்கு இது சற்று எரிச்சலை ஏற்படுத்தியது. அதை அவர்கள் அக்பரிடம் நேரடியாகவே வெளிப்படுத்தினர். மொகலாய சாம்ராஜ்யத்திற்கு முன் ஒன்பது இஸ்லாம் சாம்ராஜ்யங்கள் அமைந்தும் அவற்றால் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியவில்லை. சுமார் இருபது அல்லது முப்பது ஆண்டுகளில் அந்த ராஜ்யங்கள் காணாமல் போயுள்ளன. ஹிந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்திய நாட்டை அவர்கள் ஆதரவின்றி நீண்டகாலம் ஆள முடியாது.  பயமுறுத்தியோ, உத்தரவிட்டோ அவர்களை ஆள முடியாது. அன்பினால் மட்டுமே ஹிந்துக்களை ஆள முடியும். நான் அனைவருக்கும் பொதுவானவன். ஹிந்துக்களும் எனது மக்களே என்று அக்பர் விளக்கம் கொடுத்தார். அக்பரின் இந்த அணுகுமுறையால் பல ராஜபுத்திர மக்களும் அக்பரை பாதுஷாவாக ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தனர். பல ஹிந்து பிரபுக்கள் அக்பரின் அரசவையில் இடம்பெற்று, விசுவாசத்துடன் பணியாற்றினர். இது உண்மையிலேயே மொகலாயர்களும் ஹிந்துக்களுக்கும் ஒரு இணக்கமான சூழ்நிலையை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல.

தப்பியோடிய சித்தூர் மன்னர் ராணா உதய் சிங் இறுதிவரை அக்பரை சக்கரவர்த்தியாக ஏற்றுக் கொள்ளவில்லை. கோழைத் தனத்தால் தான் செய்த செயலை எண்ணி வெட்கப்பட்டு அக்பருக்கு மன்னிப்பு கடிதம் கூட வழங்காமல் கி.பி. 1572 மார்ச் 3 அன்று இறந்தார். இவருக்கு மகனாக பிறந்தவர் ராணா பிரதாப் சிங். இவர் அக்பருக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள் சொல்லி மாளாது. தன் தந்தைக்கு ஏற்பட்ட களங்கத்தை துடைக்க வேண்டும் என்ற உத்வேகத்தோடு ஓர் அதிரடி படையைத் திரட்டினார் ராணா பிரதாப் சிங். அவர்களுக்கு அப்போது நாடு என்று சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. காட்டிற்குள் தங்கியிருந்து மொகலாயப் படை மீது அவ்வபோது கொரில்லா முறை தாக்குதல் நடத்தி பிரச்சனை கொடுத்தனர். கொஞ்சம் கொஞ்சமாக மேவார் பிரதேசத்தில் சிறிது எல்லைகளையும் இவர்கள் கைப்பற்றினர் என்றால் அது மிகவும் ஆச்சரியமானது. இறுதிவரை தன் வாழ்நாளில் அக்பரை எதிர்த்துக் கொண்டே வந்தார். தன் இறுதி மூச்சு வரை போராட்டத்தை கைவிடாத ராணா பிரதாப் சிங் கி.பி. 1597 ஜனவரி 19 அன்று காலமானார். இவருக்குப்பின் இவரது மகனான அமர்சிங் கும் தந்தையைப் பின்பற்றி மொகலாயர்களை எதிர்த்து புரட்சிச் செய்தார். ஆனால் திறமை மிகுந்த தளபதியான மான்சிங் படையுடன் நடந்த போரில் 1599 இல் வீரமரணம் அடைந்தார் அமர்சிங். பின்னாளில் இந்த வீரர்களை பற்றி அக்பர் மிகுந்த மரியாதையோடும் வியப்போடும் குறிப்பிடுவதுண்டு. சித்தூர் கோட்டையைக் காத்த அந்த இரண்டு தளபதிகளின் சிலையை ஆக்ராவில் நிறுவினார். அதுதான் அக்பர்.

இன்றளவும் இந்தியாவில் மிகவும் பிரபலமாக பேசப்படும் அக்பரின் வாழ்க்கையில் முக்கியமான ஒரு பகுதி என்றால் அது அக்பர் மற்றும் பீர்பால் கதைகளே.இன்று வரை சின்னஞ்சிறு குழந்தைகள் வரை கூட இக்கதைகள் மிகவும் பிரபலம் அந்த பீர்பாலை அக்பர் சந்தித்தது என்னவோ தற்செயலாக நடந்தது ஒருமுறை மாமன்னர் அக்பர் வேட்டைக்கு சென்று இருந்தார் திரும்பும் போது இருட்டி விட்டதால் மன்னருக்கும் உடன் வந்தவர்களுக்கும் வழி தெரியவில்லை ஒரு வழியாக தேடி கஷ்டப்பட்டு சாலையை அடைந்தனர் ஆனால் எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியவில்லை அதனால் அந்த சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு சின்னஞ்சிறு இளைஞனை அழைத்து விசாரித்தனர் உன் பெயர் என்ன என்று அதற்கு அந்த இளைஞன் மகேஷ் தாஸ் என்று குறிப்பிட்டார் மீண்டும் பதிலுக்கு உங்கள் பெயர் என்ன என்று பாதுஷாவிடமே கேட்டான் அந்த இளைஞன் உடன் இருந்த படைவீரர்கள் அவனை மிரட்ட, பாதுஷாவோ என் பெயர் அக்பர் ஹிந்துஸ்தானத்தின் அரசன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இந்த பாதை எங்கே செல்கிறது என்று கேட்டார் அதற்கு அந்த இளைஞன் அரசராகவே இருந்தாலும் பாதை எங்கும் செல்லாது நாம் தான் பாதையில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பதில் அளிக்க அரசர் உடனே சிரித்து விட்டார் தன் மோதிரத்தை கழற்றி கொடுத்து ஆக்ராவுக்கு ஆக்ராவிற்கு வந்த தன்னை சந்திக்கும்படி கூறினார் அதன் பிறகு மகேஷ் தாஸ் என்ற இளைஞனும் ஆக்ராவிற்கு சென்று மன்னரை சந்திக்க தன் அரசவையில் நியமித்துக் கொண்டார் பீர்பால் என்பது பின் நாட்களில் வந்த புனைப் பெயரே பிற்பாடு அரசருக்கு மிகவும் நெருக்கமான நண்பராகவும் பிரதம தளபதிகளில் ஒருவராகவும் பீர்பால் பதவி வரும் பதவி பதவி உயர்வு பெற்றார். ஒரு நாள் அக்பர் காலை எழுந்தவுடன் அரண்மனை மொட்டை மாடியில் நின்று கொண்டிருந்தார் தூரத்தில் யமுனை நதிக்கரையில் துணிகளை சலவை செய்து கொண்டிருந்த ஒரு தொழிலாளி பாதுஷாவை பார்த்த மகிழ்ச்சியில் சிரித்து கைகைகளை அசைத்து காண்பித்து மகிழ்ந்தார் அக்பர் பாதுஷாவும் மகிழ்ச்சியுடன் தன் கையை மரியாதைக்கு அசைத்து காண்பித்து விட்டு சென்றார் ஆனால் அன்றைய நாளில் படியில் இறங்கும் பொழுது அக்பர் பாதுஷா கதவில் இடித்துவிட கால் விரலில் இருந்து சற்று ரத்தம் வந்து காயமானது அரசவையில் இருந்த சில ஜால்ராக்கள் மன்னர் இன்று காலை யார் முகத்தில் முழித்தார் என்று தெரியவில்லையே என்று பேச ஆரம்பித்தனர் அக்பரும் பேச்சுவாக்கில் அந்த சலவை தொழிலாளி பற்றிய விஷயத்தை சொல்லிவிட உடனடியாக வீரர்களை அனுப்பிய அந்த தொழிலாளியை இழுத்து வந்தனர் மன்னரின் காலத்திற்கு காரணமான இவனுக்கு குறைந்தது 50 சவுக்கடியாவது கிடைக்க வேண்டும் என்று கூறினார் கண்ணசைக்கும் நேரத்தில் இவை எல்லாம் நடந்து கொண்டிருந்ததால் அக்பருக்கும் என்ன செய்வதென்று புரியாமல் திகைத்தார் இந்த தொழிலாளியின் மனைவி பீர்பாலில் காலில் விழுந்து நடந்ததை கூட அந்த தொழிலாளியை காப்பாற்றிய வேறுபாடு உடனடியாக அரசவை சென்றார் மன்னரிடம் சென்று அவரைப் பார்த்ததால் உங்களுக்கு காலில் சிறு காயம் தான் ஆனால் அவர் உங்களைப் பார்த்ததால் இன்று அவருக்கு 50 சவுக்கடிகள் கிடைத்தால் யார் முகம் மிகவும் ராசி அல்லாதது என்று நாளை மக்களிடம் விவாதம் கிளம்பினால் அது மாமன்னருக்கு இழுக்காகும் என்று கூற நகைச்சுவையுடன் சிரித்த அக்பர் அந்த தொழிலாளியை விட்டு விட்டார் இப்படி அக்பர் மற்றும் பீர்பாலுக்கு இடையேயான கதைகளும் அதில் இருக்கும் சிறப்புகளும் ஏராளம் ஒரு முறை வடமேற்கில் ஆப்கானியர்கள் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்ததால் பிரதம தளபதி என்ற முறையில் பீர்பால் தலைமையில் ஒரு படை சென்றது ஆனால் மலை இடுக்குகளில் சென்று கொண்டிருக்கும் பொழுது உச்சியில் இருந்து ஆப்கானியர் படை வீரர்கள் முகலாயப் படையை சூழ்ந்து கொண்டது அம்புகளால் பள்ளத்தில் இருந்த முகலாய்ப்படை சமாதியானது பீர்பாலை பேச விட்டால் பேசிய நம் படையை வென்று விடுவான் என்று எண்ணிய ஆப்கானி படை வீரன் ஒருவன் பீர்பாலின் தலையை சீவினால் இந்த விஷயம் அறிந்த அக்பர் மிகவும் வருத்தப்பட்டு இரண்டு நாட்கள் வரை யாரிடமும் பேசாமல் உணவு உண்ணாமல் தவித்ததாக கூறப்படுகிறது வேறு யார் மறைவின் போதும் மன்னர் இந்த அளவிற்கு வருந்தியது கிடையாது என்று கூறுகிறது வரலாறு ஆனால் அதன் பிறகு கோபம் கொண்ட அக்பர் தளபதி மான்சிங் தலைமையில் வேறு ஒரு படையை அனுப்பி அந்த ஆப்கானி படைய வீரர்களை முற்றிலுமாக அழித்தார்.

சற்று சிறிது காலமாகவே இந்தியாவில் பெருகி வரும் மதங்களையும் ஜாதிகளையும் பற்றி அக்பர் சிந்திக்க தொடங்கியிருந்தார் இந்தியாவை அஸ்திவாரத்தில் இருந்து ஆள வேண்டும் என்றால் மதம் மற்றும் ஜாதி பிரச்சனை வரக்கூடாது என்று எண்ணி அவர் அதற்கு ஒரு முடிவு கட்ட எண்ணினார் ஆதலால் இந்தியாவில் இருக்கும் அனைத்து மதம் மற்றும் ஜாதிகளை சார்ந்த அறிஞர்களை அழைத்து அது பற்றி அறிந்து கொள்ள விவாதங்கள் நடத்தினார் பாபர் ஆட்சியின் போது கோவாவில் காலூன்று இருந்த போர்ஷைகேசிய கிறிஸ்துவ பாதிரியார்கள் அக்பருக்கு நெருக்கமாயினர் அதற்கு காரணம் தன்னுடைய இஸ்லாம் மதத்தை பற்றிய அக்பருக்கு ஏற்கனவே நன்றாக தெரியும் இத்தனை நாட்கள் இந்தியாவைப் பற்றியும் ஹிந்துக்கள் பற்றியும் தெரிந்து கொண்டிருந்தார் ஆதலால் அவருக்கு புதிதாக இருக்கும் கிறிஸ்தவ மதத்தை பற்றி தெரிந்து கொள்ள அவருக்கு ஆர்வம் அதிகமாக இருந்தது அதனால் கிறிஸ்தவ பாதிரியார்களுடன் நெருக்கமாக இருந்து அம் மதத்தைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருந்தார் ஒருமுறை பாதிரியார் ஒருவர் மன்னரிடம் தோளில் கை போட்டு மாமன்னருக்கு இத்தனை ராணிகள் அவசியம்தானா என்று கேட்க மன்னர் அவரின் முகத்தை பார்த்து விட்டு தோளில் அவர் வைத்த கையை எடுத்துவிட்டு ஆம் தேவைதான் என்று பதில் அளித்தார் மன்னர் தங்களுடன் நெருக்கமாக இருப்பதை வைத்துக் கொண்டு அக்பர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிடுவார் என்று கணக்கு போட்டனர் அந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் ஆனால் அக்பர் அனைவரையும் ஏமாற்றிவிட்டு தீன் இலாஹி என்ற ஒரு புதிய மதத்தை உருவாக்கினார் அதன் அர்த்தம் கடவுளின் மதம் என்பதே மத வேறுபாடு இருக்கும் இந்தியாவில் நிரந்தர ஆட்சி செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டு அக்பர் தேடிய தீர்வு தான் இந்த தீன் இலாஹி இதன் பிறகு தான் முகலாய நாணயங்களில் அல்லாஹு அக்பர் என்ற வாசகங்கள் இடம் பிடித்தன கிறிஸ்துவ மதம் குருமார்கள் பதறிப் போயினர் சன்னி பிரிவில் பிறந்த ஊர் இஸ்லாமிய மாமன்னர் இப்படி செய்கிறார் என்று வருத்தப்பட்டனர் அல்லாஹூ அக்பர் என்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் என்று இதற்கு அர்த்தமா அல்லது அக்பரே இறைவன் என்பது அர்த்தமா என்று பதறிப் போயினர் மன்னரிடம் இது பற்றி கேட்டபோது நான் இஸ்லாமிய மத கோட்பாடுகளை மறந்து விடவில்லை ஆனால் அதில் இருக்கும் கடினமான சில வழிமுறைகளை தளர்த்தி விடவே விரும்புகிறேன் மேலும் மற்ற மதங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்ள விரும்புகிறேன் அதனால் தான் இந்த தீன் இலாஹி என்றும் இதை பின்பற்றும்படி மக்களை யாரும் வற்புறுத்தக் கூடாது என்றும் கட்டளையிட்டார். ஆனால் மன்னர் எதிர்பார்த்தபடி எந்த மதத்தினரும் தீன் இலாஹியை ஏற்றுக்கொள்ளவில்லை இது வெறும் காகித வடிவில் இருக்கும் இயக்கமாகவே இருந்து மன்னர் மறைந்த உடன் அந்த இயக்கமும் மறைந்தது.

பல்வேறு மதங்களை எல்லாம் கடந்து இந்தியாவை ஒருங்கிணைத்து ஆட்சி செய்ததில் அக்பர் மிகவும் புத்திசாலி என்றும் அவர் அசோக சக்கரவர்த்திக்கு இணையானவர் என்றும் வரலாற்று ஆசிரியர்கள் பலர் கூறினாலும், தன்னை தானே ஒரு "அவதார புருஷன்" என்பது போல் அக்பர் நடந்து கொண்டார். இந்துக்கள் மகிழ வேண்டும் என்பதற்காக சிவராத்திரி பண்டிகை போது அரண்மனையில் விரதம் இருந்து யாகம் நடத்தினார் அக்பர். மேலும் மந்திரங்கள் ஓதி சூரிய நமஸ்காரம் செய்வதையும் ஆரம்பித்தார். இதனால் அவர் ஓர் இஸ்லாமியர் என்பதையே மறந்து விட்டார் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் இந்தக் குற்றச்சாட்டை முழுமையாக ஏற்க முடியாது. ஏனென்றால் இதற்கு முன் இந்தியாவை சுமார் 500 ஆண்டுகளாக பல சுல்தான்கள் ஆட்சி செய்த போதிலும், இந்தியாவை ஓர் இஸ்லாமிய நாடாக மாற்ற முடியவில்லை. ஆனால் மாமன்னர் அக்பரோ, இந்தியாவை இந்துக்களின் ஒப்புதல் இல்லாமல் நிரந்தரமாக ஆட்சி செய்ய முடியாது என்பதை மனதளவில் ஆழமாக உணர்ந்து இருந்தார். மேலும் தன் தந்தை அனைத்து மதங்களில் இருக்கும் நல்ல விஷயங்களை எடுத்துக் கொண்டு வாழ்ந்தார், ஆனால் மனதளவில் இறுதிவரை அவர் ஓர் இஸ்லாமியராகவே வாழ்ந்தார் என்று அக்பரின் மகன் சலீம் தன் சுயசரிதையில் குறிப்பிட்டிருக்கிறார்.

அக்பரை பொறுத்தவரை தன் மகன்களான சலீம், தானியேல் மற்றும் முராத் என அனைத்து மகன்களும் பட்டத்து அரியணையில் ஏற தகுதி இல்லாதவர்கள். காரணம், அனைவரும் மதுவிற்கு அடிமையாக இருந்தனர். ஆனால் மூத்த மகனான சலீமிக்கு அரியணை மீது இருந்த ஆசை நாளுக்கு நாள் அதிகமானது. மற்றவர்கள் சொல்வது போல், தன் தந்தை உண்மையிலேயே அவதார புருஷன் தானா? அவர் இறக்கவே மாட்டாரா? என்றெல்லாம் மற்றவர்களிடம் கேட்க ஆரம்பித்தார் சலீம். கி. பி. 1600 - இல் அக்பர் முகலாய சாம்ராஜ்யத்தின் எல்லையை விரிவாக்க, தெற்கு திசையில் போர் முனையில் இருந்தார். இதுதான் தருணம் என்று காத்திருந்த வங்காளத்தில் ஆட்சியில் இருந்த ஆப்கானிய தளபதி ஒருவர், டெல்லிக்கு எதிராக படை திரட்டி போர் தொடுத்தார். தான் தெற்கில் இருப்பதால், அலகாபாத்தில் வேறு ஒரு படையுடன் இருக்கும் மூத்த மகன் சலீமிற்கு செய்தி அனுப்பினார் அக்பர். ஆனால் சலீமோ, அதன் விளைவு புரியாமல் அந்த செய்தியை கண்டு கொள்ளவே இல்லை. பிறகு, ஒரு படை தளபதியின் கீழ் இருந்த வேறு ஒரு படைப்பிரிவு ஆப்கானிய படையை விரட்டி அடித்தது. ஆனால் அக்பருக்கு தன் மகன் மீது கோபம் அதிகமானது. தனது மகன் செய்யும் செயல்களில் கோபம் கொண்ட அக்பர், இது பற்றி ஆலோசனை செய்ய, தனது நம்பிக்கைக்குறிய தளபதியான அப்துல் பசல்க்கு கடிதம் எழுதினார். அவரோ, "இளவரசர் என்று எல்லாம் பார்க்க வேண்டாம். சக்கரவர்த்தியின் ஆணையை மதிக்காவிட்டால் அதற்கான தண்டனை கொடுக்க வேண்டும். உத்தரவிட்டால் அவரின் தலையை நானே கொண்டு வருகிறேன்" என்று அக்பருக்கு பதில் கடிதம் எழுதினார்.

 இதனை ஒற்றர்கள் மூலமாக அறிந்து கொண்ட சலீம், அப்துல் பசல் மீது கடும் கோபத்தில் இருந்தார். அப்துல் பசலை டெல்லிக்கு வந்து தன்னை நேரில் சந்திக்குமாறு உத்தரவிட்டிருந்தார் அக்பர்.  இதை அறிந்து கொண்ட சலீம், ஜான்சி பிரதேசத்தை ஆண்டு கொண்டிருந்த ஒரு சிற்றரசர் மூலமாக அப்துலை கொலை செய்து தலையை தந்தை அக்பருக்கு அனுப்பினார். மிகுந்த கோபமும் வருத்தமும் அடைந்தார். இதற்கிடையில், ஒரு முறை அக்பருக்கு எதிராகவே முப்பதாயிரம் குதிரை வீரர்கள் கொண்ட படையுடன், அக்பரை போரில் எதிர்கொள்ள திட்டமிட்டார் சலீம். இதை அறிந்த அக்பர், "திரும்பி செல்லாவிடில் விளைவுகள் மிக மோசமானதாக இருக்கும்" என்று எச்சரித்து ஒரு கடிதம் மட்டுமே அனுப்பினார். அதற்கே பயந்து போய் சலீம் பின்வாங்கி சென்றார். ஏனென்றால் அக்பரின் வீரமும் போர் திறனும் அதற்கு காரணம். 

அதற்குப் பிறகு பல மாதங்கள் கழித்து தான் டெல்லிக்குத் திரும்பினார் சலீம். அரச குலத்து பெண்கள், அவரை மறைத்து வைத்துப் பாதுகாத்து வந்தனர். வெகு நாட்கள் கழித்து தான், அக்பர் முன் சலீமை கொண்டு சென்றனர். மிகுந்த கோபத்தில் இருந்த அக்பர், சலீமை ஒரு ஒரு அறைக்குள் பூட்டி, பிரம்பை வைத்து அடி வெளுத்து விட்டார். பல நாட்கள் அந்த அறையில் அடைத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டார். பல நாட்களாக மதுவை தொடாததால் அவரது கைகள் நடுங்க ஆரம்பித்தன. இந்த சித்திரவதைக்கு பின் வாழ்நாள் முழுவதும் அக்பர் மீது மிகுந்த பயம் கொண்டிருந்தார் சலீம். முராத் ஏற்கெனவே இறந்திருந்தார். தற்போது மற்றொரு மகன் தானியேலும் மது எற்ற அரக்கனுக்கு பலியானார். தற்போது, சலீமை விட்டால் அக்பருக்கு வேறு வாரிசு இல்லை என்ற நிலை வந்தது. இருப்பினும், அக்பருக்கு அதில் விருப்பமில்லை. அரசவையில் இருந்து மற்றொரு யோசனை அக்பருக்கு தெரிவிக்கப்பட்டது. சலீமை அரியணையில் அமர்த்த விருப்பமில்லை என்றால், அவரது மகனான குஸ்ரூ வுக்கு மகுடம் சூட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதற்கு அரசவையில் பெரும்பான்மை ஆதரவு கிடைக்கவில்லை. அதனால் குஸ்ரூ வின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று நினைத்த மான் சிங் என்ற தளபதி ஒருவர், அக்பரின் பேரனான குஸ்ரூ வை வேறு ஒரு தேசத்திற்கு பாதுகாப்பாக அழைத்து சென்றுவிட்டார்.

திடீரென்று ஒரு நாள் அக்பருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.  வயிற்றுப்போக்குடன் ரத்தமும் நிறைய வெளியேற, படுத்த படுக்கையானார். நிலைமை கை மீறிப் போனது. பாதுஷா பிழைக்க மாட்டார் என்பதை உணர்ந்து கொண்ட அமைச்சர்கள், சலீமை அக்பர் முன் கொண்டு வந்து நிறுத்தினர். தன் கண்களாலேயே விருப்பம் இல்லாமல் சம்மதம் தெரிவித்த அக்பர், அவருக்கு மகுடம் சூட்ட ஆணையிட்டார். ஹுமாயூன் பாதுஷாவும் அவருக்கு பின் அக்பரும் உபயோகித்த பிரத்தியேக குருவாளை எடுத்து சலீமுக்கு தரச் சொல்லி சைகை செய்தார் அக்பர். ராஜ உடையுடன் தந்தையை வணங்குவதற்காக கட்டில் அருகே சென்றார். "ஜஹாங்கீர்" என்ற பட்டப்பெயருடன் திரும்பினார் சலீம்.

 அக்பர் பாதுஷாவின் உயிர் பிரிந்தது. முகலாய சாம்ராஜ்யத்தின் ஓர் பெரும் அத்தியாயம் முடிவுக்கு வந்தது. அக்பர் என்ற உலகப் புகழ்பெற்ற மன்னரின் முடிவு எழுதப்பட்டது. தன் தந்தை நினைத்த படி, திறனற்றவராக இருந்தாரா சலீம்? அல்லது அக்பர் விட்டுச் சென்ற அந்த ராஜ்ஜியத்தை சிறப்பாக ஆண்டாரா ஜஹாங்கீர்? 

அடுத்த அத்தியாயத்தில்....!

Comments

Popular posts from this blog

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Ways to reduce my Tax

UDYAM - Whether a boon or bane for MSMEs