இந்தியாவின் கதை : ஜஹாங்கீர்

                        அக்பரின் ஆட்சியில் முகலாய சாம்ராஜ்யம் பறந்து விரிந்திருந்தது. அதன் எல்லையானது மேற்கே ஆப்கானிஸ்தானும், கிழக்கே வங்காளமும், வடக்கே காஷ்மீரும் மற்றும் தெற்கே கோதாவரி நதி வரையிலும் பரவி இருந்தது. மற்ற முகலாய மன்னர்களை விட அக்பர் ஏன் புகழ்பெற்றார் என்றால், இந்தியா என்ற ஒரு இந்து நாட்டை அவர்களின் ஒப்புதல் இல்லாமல் நீண்ட நாட்கள் ஆள முடியாது என்பதை ஆழமாக மனதளவில் உணர்ந்திருந்தார். அதனாலேயே இஸ்லாமும் இந்து மதமும் சமம் என்று பார்த்தார். ஆனால் இப்படிப்பட்ட சாம்ராஜ்யத்தை தன் மகன் சலீம் சிறப்பாக ஆட்சி செய்வானா? என்ற  சந்தேகம் அக்பருக்கு இருந்தது. ஆனால் விதி வசத்தால் ஜஹாங்கீர் மிகச் சிறப்பாக ஆட்சி செய்தார். தந்தை இருந்தவரை அவரது நிழலில் சிக்கி தவித்து வந்த சலீம் அரியணை கிடைத்த பிறகு, ஜஹாங்கீர் ஆக மாறிய பிறகு, அவருடைய திறமை வெளிவந்தது. தன் தந்தை விட்டு சென்ற சாம்ராஜ்யத்தை மிகச் சிறந்த நிர்வாக திறனுடன் ஆட்சி செய்தார். அக்பர் இறந்த பிறகு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டித்து விட்டு அக்டோபர் 24, 1605 -இல் அரியாசனத்தில் அமர்ந்தார். ஜஹாங்கீர் எடுத்த எடுப்பிலேயே தனது புத்திசாலித்தனத்தை காண்பித்தார். முக்கியமான அமைச்சர்கள், அதிகாரிகள், தளபதிகள் என அனைவருக்கும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது. இதனால் அரசாங்கப் பணிகள் தொய்வின்றி சுறுசுறுப்பாக நடைபெற்றது. இதனால் பொதுமக்களிடம் பாதுஷாவின் பெயர் விரைவில் புகழ்பெற்றது. தந்தை அக்பர் ஒரு முடிவெடுக்க வேண்டும் என்றால் அதில் மிகவும் உறுதியாக இருப்பார். ஆனால் மகன் அவ்வாறு இல்லாமல் எல்லாம் கலந்த ஒரு கலவையாகவே காணப்பட்டார். தன் புலன்களை கட்டுப்படுத்த தெரியாதவராக பாதுஷா இருந்தார். அவரது மனைவிகளின் எண்ணிக்கை இருபதை தாண்டியது. அந்தப்புரத்து ராணிகளின் எண்ணிக்கை முந்நூறைத் தாண்டியது. மது மற்றும் ஓபியப் பிரியராகவும் இருந்தார் ஜஹாங்கீர். ஆனால் அவர் ஓர் கலைநயம் மிக்கவர். பறவைகளின் வாழ்க்கை முறை குறித்து மிக நுணுக்கமாக ஆராய்ச்சி செய்தார். அவரே தனிப்பட்ட முறையில் பறவைகளுடன் இருந்து குறிப்பு எடுத்துக் கொள்வார். அவருடைய குறிப்பு மட்டும் ஓர் ஆராய்ச்சி கட்டுரைக்கு சமமாக இருந்தது. ஓர் பறவை எவ்வாறு வாழ்கிறது என்பது முதல் ஒரு மனிதன் இறக்கும் பொழுது எவ்வாறு இருப்பான் என்பது வரை ஓவியமாக வரைந்து வைத்து தன் கலை தாகத்தை தீர்த்துக் கொண்டார். 

இருந்தும் பாதுஷாவுக்குள் ஈவு, இரக்கம் காட்டாத குணமும் ஒருபுறம் இருந்தது. குற்றவாளிகளுக்கும், தனக்கு வேண்டாதவர்களுக்கும் விதவிதமான தண்டனை கொடுப்பதில் பாதுஷா மிகச் சிறந்தவர். ஒரு முறை சமையல்காரர் ஒருவர் சீனாவில் இருந்து கொண்டுவரப்பட்ட பாத்திரத்தை கை தவறி கீழே போட்டு உடைத்து விட்டார். உடனே கோபம் கொண்ட பாதுஷா, அந்த சமையற்காரரை சீனாவிற்கே சென்று அந்த பாத்திரத்தை மீண்டும் வாங்கி வர உத்தரவிட்டார். அக்பருக்குப் பிறகு ஜஹாங்கீரின் முதல் மகனான குஸ்ரூ வை பட்டத்திற்கு கொண்டுவர பிரதம தளபதி மான்சிங் முயற்சி செய்தது பற்றி சென்ற அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். ஜஹாங்கீருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். குஸ்ரூ மற்றும் குர்ரம். அக்பருக்கு தன்மகன் சலீமை விட பேரன் குஸ்ரூ மீதே அதிக பாசம் இருந்தது. அதனால் சலீம் அரியணைக்கு வருவாரா? அல்லது குஸ்ரூ அரியணைக்கு வருவாரா? என்ற சந்தேகமே மக்கள் மத்தியில் இருந்தது. 


அக்பர் உயிரோடு இருந்தபோதே தன் மகனும் தன் பேரனும் மோதிக் கொள்வதை காண நேர்ந்தது. ஒரு முறை தன் மகனின் யானையும், பேரனின் யானையும் மோதிக்கொள்ள வேண்டும் என அக்பர் ஆசைப்பட்டார். அவர் ஆசை என்னவோ பேரன் குஸ்ரூவின் யானை ஜெயிக்க வேண்டும் என்பதாகவே இருந்திருக்கும். ஆனால் அங்கு நடந்ததோ மகன் சலீமின் யானை ஜெயித்தது. இதனால் கோபம் கொண்ட குஸ்ரூ தன் வாளை எடுத்துக் கொண்டு தன் தந்தையான சலீம் உடன் சண்டைக்கு சென்றார். இதை பார்க்க விரும்பாத அக்பர் தனது இளைய பேரனான குர்ரமை விட்டு அவர்களை சமாதானப்படுத்த சொன்னார். இந்த குர்ரம் தான் வருங்காலத்தில் ஜஹாங்கீருக்கு பிறகு அரியணை ஏறி உலகப் புகழ்பெற்ற தாஜ்மஹாலை கட்டப் போகும் ஷாஜகான்.

அப்படி என்றால் குஸ்ரூ என்னவானார்? என்ற உங்கள் கேள்விக்கான பதில் சிறிது நேரத்தில் கிடைக்கும். அக்பர் பாதுஷா இறந்த பிறகு 17 ஆண்டுகளாக நாட்டில் பெரிய கலவரமோ, பிரச்சனையோ நடைபெறவில்லை. யாரும் போர் தொடுத்தும் வரவில்லை. ஜஹாங்கீர் பாதுஷாவும் பெரும்பாலான நேரத்தை ஓவியர்களோடும் பறவைகளோடும் செலவிட்டார் என்றால் அக்பர் எவ்வளவு கச்சிதமான ஒரு சாம்ராஜ்யத்தை உருவாக்கி விட்டுச் சென்றிருந்தார் என்பது நமக்கு புரியும். இந்த அமைதியான சூழலுக்கு கலங்கம் வந்தது தந்தை ஜஹாங்கீர் மற்றும் மகன் குஸ்ரூ இடையேயான மோதல் தான். ஆட்சிக்கு வந்த உடனேயே தன் மகனுக்கு ஆதரவாக செயல்பட்ட பிரதமர் தளபதி மான்சிங் வங்காளத்துக்கு கவர்னராக அனுப்பி வைக்கப்பட்டார். மகன் குஸ்ரூ எச்சரிக்கையுடன் வீட்டு காவலில் வைக்கப்பட்டார். ஏனென்றால் மனம் கலங்கி மன்னிப்பதற்கு ஜஹாங்கீர் என்ன ஹுமாயூனா?! இவர் ஜஹாங்கீர் என்ற சலீம். 

ஒரு நாள் தாத்தா அக்பரின் கல்லறைக்கு சென்று வழிபாடு நடத்தி விட்டு வருவதாக கூறி விட்டு, முகலாய படை வீரர்களிடமிருந்து தப்பிச் சென்றார் இளவரசர் குஸ்ரூ. எங்கோ தலைமறைவாக சென்று சிறிது நாட்கள் கழித்து ஒரு படையை திரட்டி தன் தந்தை ஜஹாங்கீர் பாதுஷா உடனேயே போருக்கு தயாரானார். ஒரு மணி நேரம் கூட நீடிக்காத அந்த போரில் முகலாய படை கண்ணிமைக்கும் நேரத்தில் எதிரில் இருந்த தலைகளை வெட்டி வீசியது. பாபரும் அக்பரும் கட்டி அமைத்த படை அது என்பதை குஸ்ரூ மறந்து விட்டார். கைது செய்யப்பட்ட அனைவரையும் கொலை செய்ய உத்தரவிட்டார் பாதுஷா. அந்த இடத்தில் இளவரசர் குஸ்ரூவை தன் யானையில் அமர்த்தி ஒரு நாள் முழுவதும் அந்த இடத்தை சுற்றிவர செய்து தன் கோபத்தை தணித்துக் கொண்டார். இளவரசரை கொல்ல வேண்டாம் என்று அப்போது முடிவெடுத்தார். ஆனாலும் அதன் பிறகு ஓர் ஆண்டுக்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டு வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டார் குஸ்ரூ. அதன் பிறகு தனது மகனின் மனம் மாறி இருக்கும் என்று தப்பு கணக்கு போட்டார் பாதுஷா. அதனால் மகனை விடுவித்து தன்னுடன் வேட்டைக்கும் அழைத்துச் சென்றார். ஆனால் செல்லும் வழியில் பாதுஷாவுக்கு ஒரு ரகசிய தகவல் வந்தது. தனது மகன், தங்களைக் கொல்லத் திட்டம் போட்டு இருப்பதாகவும் இதற்கு அரண்மனையில் இருக்கும் சுமார் 400 பேர் உடந்தை எனவும் தகவல் வந்தது. அனைவரையும் கொல்லத் தேவையில்லை. அவர்கள் மீது ஓர் கண் வைத்துக் கொண்டால் போதும். ஆனால் அவர்களுக்கு பயம் வர வேண்டும் என்று கூறிய பாதுஷா, அதில் நாலு பேரை மட்டும் தேர்வு செய்து கொலை செய்ய உத்தரவிட்டார். இனிமேலும் தன் மகனை முழுமையாக நடமாட விடக்கூடாது என்று தீர்மானித்தார் பாதுஷா. அதனால் தன் சொந்த மகனின் கண் பார்வையை பறிக்க உத்தரவிட்டார். பார்வையை பறிக்கும் போது என் மகன் மிகவும் வீறிட்டு அழுததாக கேள்விப்பட்டேன். ஆனாலும் என்ன செய்வது?? அரசரின் கடமையாயிற்றே...? என்று தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார் ஜஹாங்கீர். பிற்காலத்தில் மகன் மீது கொண்ட பாசத்தால் வைத்தியத்துக்கு ஏற்பாடு செய்தார். ஆதலால் ஒரு கண்ணில் மட்டும் சற்று பார்வை மீண்டும் கிடைத்தது. அதன் பிறகு தன் தந்தைக்கு எதிராக குஸ்ரூ தலை தூக்கவே இல்லை. வரலாற்றை புரட்டிப் பார்த்தால் ஜஹாங்கீரை விட குஸ்ரூவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருந்தது. நன்கு படித்தவர், நன்கு திறமையானவர் மேலும் ஏகபத்தினி விரதத்தை கடைப்பிடித்தவர் குஸ்ரூ. இருப்பினும் விதியின் விளையாட்டால் அவர் வரலாற்றில் தோல்வி அடைந்தவராகவே கருதப்படுவார். 

ஒரு நாள் பாதுஷா ஜஹாங்கீர் சந்தைக்கு வந்தார். அப்பொழுது அங்கு ஒரு கடையிலிருந்த பெண்ணின் மீது அவரது பார்வை விழுந்தது. அரண்மனை அமைச்சரின் ஓர் விதவை மகளான அவளது பெயர் மெகருனிஸ்ஸா. பிடித்துப் போன பிறகு பாதுஷா என்ன மாத கணக்கிலா காத்திருப்பார்? உடனே ஜஹாங்கீர் - மெகருனிஸ்ஸா திருமணம் நடைபெற்றது. தனது மனைவிக்கு நூர் மஹால் அதாவது "அரண்மனையின் ஒளி" என்று பெயர் வைத்தார். ஆனால் அதிலும் திருப்தி அடையாத பாதுஷா,  நூர்ஜகான் என்று பெயரை மாற்றினார். அதாவது "உலகின் ஒளி" என்று பொருள். அழகிலும், அறிவிலும் கிரேகத்தின்  கிளியோபட்ராவுக்கு இணையான நூர்ஜகான்,  ஜஹாங்கீர் இதயத்தில் மட்டுமல்ல, வரலாற்றிலும் ஒரு தனி இடம் பிடித்த பெண்.

               நூர்ஜகான் விதவை ஆனதற்கு பின்னால் ஏதேனும் மர்மம் உண்டா? அவளை திருமணம் செய்வதற்காக பாதுஷா ஜஹாங்கீர், அவளது கணவரை கொல்ல உத்தரவிட்டாரா? என்று சில வதந்திகள் உள்ளன. ஆனால் வேறு சில வரலாற்று ஆசிரியர்களோ, நூர்ஜகானின் கணவர் க்ஷெர் ஆப்கான், வங்காள கவர்னராக இருந்தபோது பாதுஷாவை தரை குறைவாக பேசியதாகவும் அதனால் பாதுஷா மீது விசுவாசம் கொண்ட வீரர்கள் அவரை கொன்று விட்டதாகவும் கூறுகிறார்கள். எது எப்படியோ நடந்தது அனைத்தும் ஜஹாங்கீருக்கு சாதகமாக அமைந்தது. பெண்களின் கடந்த கால வாழ்க்கை பற்றி பேசுவது  அநாகரிகமானது என்பதால் நாமும் அதை கடந்து சென்று விட்டு "மகாராணி" நூர்ஜகான் பேகத்தைப் பற்றி பார்க்கலாம்.

                         முக்காடு போட்டுக் கொண்டாலும் பெண்கள் நினைத்து விட்டால் அவர்களுக்கு அந்த வானமே எல்லை என்பதற்கு நூர்ஜகான் ஒரு மிகச் சிறந்த உதாரணம். அவரிடம் அவ்வளவு திறமைகள் இருந்தன அவரது அழகை போலவே. அரண்மனையில் இருக்கும் யாரும் நூர்ஜகானை சோம்பலோடு பார்த்ததே இல்லை. அவர் அவ்வளவு சுறுசுறுப்பானவர். பாதுஷா மற்றும் முக்கிய ராணிகள் அனைவருக்கும் நூர்ஜகான் தான் ஆடைகளை வடிவமைப்பார். மேலும் இவர் வரையும் நகைகளையே பொற்கொல்லர்கள் உருவாக்குவர். பாதுஷா காதல் உணர்வோடு எந்த தலைப்பு கொடுத்தாலும் அந்த தலைப்பிற்கான கவிதை அடுக்கடுக்காக நூர்ஜகானின் வார்த்தைகளில் இருந்து வெளிப்படும். அதற்காக மகாராணி நூர்ஜகான் பேகத்தை ஓர் சிறந்த இல்லத்தரசி மட்டும் என எண்ணிவிட வேண்டாம். அவர் ஒரு மிகச்சிறந்த வீராங்கனை. வேட்டையாடுவதில் வல்லவர். ஒருமுறை நான்கு புலிகளை வேட்டையாடி விட்டே அரண்மனை திரும்புவேன் என்று பாதுஷாவிடம் சபதம் எடுத்துக்கொண்டு வேட்டையாட சென்றார். சொன்னது போல் நான்கு புலிகளை வேட்டையாடி விட்டே திரும்பினார். ஆனால் பாதுஷாவிடம் அவர் வருத்தத்தோடு சொன்னது "ஒரு புலியை மட்டும் கொல்ல எனக்கு இரண்டு துப்பாக்கி ரவை தேவைப்பட்டது". ஒரு புலியை கொல்ல ஒரு துப்பாக்கி ரவையை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அவர் நினைத்திருந்தார் அவரது வீரம் அப்படிப்பட்டது. வந்தவுடன் வாசனை திரவியங்கள் தயாரிக்க ஈடுபட்டு விடுவார். தற்போது உபயோகத்தில் இருக்கும் "அத்தர்" என்ற வாசனை திரவியத்தை முதன்முதலாக கண்டுபிடித்தது நூர்ஜகான் மேகம்தான் என்று சில வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இத்தனை வேலைகளுக்கும் நடுவே சுமார் 500 அனாதைகளுக்கு திருமணமும் நடத்தி வைத்து மறுவாழ்வு தந்தார் மகாராணி நூர்ஜகான் பேகம்.

                          கலை, பேச்சு, காதல், வீரம் ராஜதந்திரம் என அனைத்திலும் கொடி கட்டி பறந்த மகாராணி நூர்ஜஹானிடம், பாதுஷா ஜஹாங்கீர் தன்னை முழுமையாக இழந்ததை யாராலும் குறை சொல்ல முடியாது. போகப் போக நூர்ஜகானின் அனுமதி இல்லாமல் அரண்மனையில் எதுவும் நடக்காது என்ற நிலை உருவானது. மகாராணி சொன்னால் அதுதான் சட்டம் என்றானது. ஜஹாங்கீர் பாதுஷாவும் நூர்ஜகான் தன் கையால் தனக்கு உணவு கொடுத்தால், அதுவே போதுமானது என்று வெளிப்படையாகவே கூறினார். பாதுஷா மட்டும் இடம்பெறும் நாணயங்களில் நூர்ஜகானின் பெயரும் இடம் பெற உத்தரவிட்டார். நூர்ஜஹானும் தன் கணவரின் தேவைகளை ஒரு தாய் போல் கவனித்துக் கொண்டார். ஆனால் மறுபக்கம் நூர்ஜகான் தனியாக ஒரு கேபினட்டை உருவாக்கினார். மந்திரிகள் அவரிடம் கைகட்டி நிற்க ஆரம்பித்தனர். நூர்ஜஹானின் தந்தை மற்றும் அண்ணன் அரண்மனையில் அசாதாரணமான செல்வாக்குடன் வலம் வந்தனர். 

                            தனது மூத்த மகன் குஸ்ரூவை எந்த அளவுக்கு பாதுஷா வெறுத்தாரோ அந்த அளவுக்கு இளைய மகன் குர்ரத்தை நேசித்தார். இளவரசருக்கு தனிப்பட்ட முறையில் மிகச்சிறந்த செல்வாக்கு வழங்கப்பட்டது. நூர்ஜஹானிடமும் நல்ல பாராட்டையும் அன்பையும் பெற்றிருந்தார். இளவரசருக்கு தன் வீரத்தை நிரூபிக்கும் வாய்ப்பும் கிடைத்தது. மேவாரைச் சார்ந்த ராஜபுத்திர புரட்சி வீரர் ராணா பிரதாப் சிங் இறந்த பிறகு அவரது மகன் அமர் சிங் முகலாய ஆட்சிக்கு எதிராக கொரில்லா போரில் ஈடுபட்டிருந்ததை முன்பே குறிப்பிட்டிருந்தோம். எத்தனை முறை படைகளை அனுப்பினாலும் அதற்கு ஓர் தெளிவில்லாத முடிவே கிடைத்தது. இதனால் எரிச்சல் அடைந்த பாதுஷா, இம்முறை இளவரசர் குர்ரம் தலைமையில் ஒரு மிகப்பெரிய படையை அனுப்பினார். போரில் இளவரசர் வீரத்திற்கு முன் கொரில்லா படைவீரர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இம்முறை முகலாயப் படை முழுமையான வெற்றியை அடைந்தது. அமர் சிங் மிகுந்த மரியாதையோடு டெல்லி அரண்மனைக்கு அழைத்து வரப்பட்டார். இதை கண்ட பாதுஷா தன் மகனின் வீரத்தையும்,  ராஜதந்திரத்தையும் நினைத்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். "ராஜபுத்திரர்கள் தனக்கு தனிப்பட்ட முறையில் மரியாதை செலுத்த வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றாலும் முகலாய கொடையின் கீழ் இணக்கமாக நடந்து கொண்டால் போதும்" என்ற நிபந்தனை விதித்தார் பாதுஷா. அமர்சிங் டெல்லி தலைமையை முழுமையாக ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு ராஜபுத்திர வீரர்கள் டெல்லி அரியணைக்கு எதிராக புரட்சி செய்யவில்லை - பிற்காலத்தில் ஔரங்கசீப் ஆட்சி காலத்தில் அவர்கள் சீண்டப்படும் வரை. 

                    அக்பர் காலத்தில் இருந்து வழிக்கு வராமல் இருந்த தட்சிணப் பிரதேசத்தில் நிஜாம் ஷாஜி வம்சத்தைச் சேர்ந்த மாலிக் ஆம்பர் என்ற ஒரு சிற்றரசர், மராட்டியர்களோடு கூட்டணி அமைத்து முகலாயர்களுக்கு எதிராக போர் அறிவித்தார். இதை சமாளிக்க இளவரசர் தலைமையில் மீண்டும் ஒரு பெரும் படை கி. பி.  1617 இல் தெற்கு நோக்கிச் சென்றது இளவரசரின் வீரத்தை சமாளிக்க முடியாமல் டெல்லிக்கு கப்பம் கட்ட ஒப்புக்கொண்டார் மாலிக். இப்படி மேவாரைத்  தொடர்ந்து தெற்கிலும் வெற்றிக் கொடி நாட்டி, தன் தந்தையான பாதுஷாவுக்கு ஏராளமான வைர வைடூரியங்களை பரிசாக அனுப்பினார் இளவரசர். அரண்மனையில் இதற்கு ஓர் மிகப் பெரிய வெற்றி விழாவே நடத்தினார் பாதுஷா. அப்போதுதான் இளவரசருக்கு "ஷாஜகான்" என்ற பட்டப் பெயரை சூட்டினார் அதாவது "உலகை ஆள்பவர்" என்று பொருள். நூர்ஜகான் பேகமும் கூட உச்சகட்ட மகிழ்ச்சியில் இருந்தார். ஆனால் மகாராணி நூர்ஜகான் பேகம் மற்றும் இளவரசர் ஷாஜகான் ஆகியோருக்கான நட்பு வெகு நாட்கள் நீடிக்க வில்லை. பின்னே, ஒரே உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியுமா?  

                                    பிற்காலத்தில் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் வாலை ஆட்டப் போகும் பிரிட்டிஷ் கிழக்திந்திய கம்பெனி லேசாக தலை தூக்கிய நேரம் இது. கி.பி. 1615 இல் இங்கிலாந்து சார்பாக சர் தாமஸ் ரோ என்ற ஒரு பிரபு இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து பாதுஷா ஜஹாங்கீரை அவரது அரண்மனையில் சந்தித்தார். கம்பெனி சார்பாக முகலாய சாம்ராஜ்ஜியத்துடன் இந்திய நாட்டில் ஓர் "வர்த்தக உடன்படிக்கை" செய்து கொள்ள வேண்டும் என சர் தாமஸ் விரும்பினார். பாதுஷாவின் உள் மனது என்ன நினைத்ததோ தெரியவில்லை, ஆனால் உடன்படிக்கை என்றெல்லாம் எதுவும் தேவையில்லை. நீங்கள் இங்கு வர்த்தகம் செய்து கொள்ளலாம். ஆனால் சொந்தமாக கட்டிடங்களை கட்டிக் கொள்ளவோ, வாங்கவோ கூடாது. வேண்டுமானால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்று நிபந்தனை விதித்தார். இது சர் தாமஸ் க்கு சற்று கவலையாக இருந்தது. பாதுஷாவை கவர்வதற்காக இங்கிலாந்து நாட்டிலிருந்து பல பரிசுப் பொருட்களை அரண்மனைக்கு வரவழைத்தார். சுமார் மூன்று ஆண்டுகள் அரண்மனையில் தங்கியிருந்து மன்னருடன் நன்கு பழகி இந்தியாவைப் பற்றி குறிப்பு எடுத்துக் கொண்டார். தான் நினைத்து வந்த காரியம் பெரிய அளவில் கை கூட வில்லை என்றாலும் அதற்கான அச்சாரத்தை அமைத்து விட்டு தன் சொந்த நாட்டிற்கு திரும்பினார் தாமஸ். மகாராணி நூர்ஜகானின் தரிசனம் மட்டும் தாமசுக்கு கடைசி வரை கிடைக்கவில்லை. தன் சொந்த நாட்டிற்கு சென்ற பிறகு, பாதுஷா நாட்டை ஆண்டாலும் அவரை ஆள்வது மகாராணி நூர்ஜகான் பேகம் தான் என்று கம்பெனியிடம் தெரிவித்தார்.  அதற்கேற்றார் போல், சாம்ராஜ்யமும் அவரது "கைபிடிக்குள்" அமைதியாக இருந்தது. 

                   ஒட்டுமொத்த சாம்ராஜ்யமும் மகாராணியின் செல்வாக்கிற்கு பயந்து அவரது கை பிடிக்குள் இருக்கும்போது, ஒரு சில பாதுஷாவின் "உண்மையான" விசுவாசிகளுக்கு இது எரிச்சலை தந்தது. பாதுஷா ஒரு பெண்ணின் கட்டுப்பாட்டிற்குள் இருப்பது நாட்டிற்கு நல்லதல்ல என்று அவர்கள் விரும்பினர். ஆனாலும் அதை அவர்களால் வெளிப்படுத்த முடியாது சூழ்நிலை நிலவியது. அதிலும் துணிச்சல் மிக்கவரான மஹபத்கான் என்பவர் மட்டும் துணிச்சலோடு பாதுஷாவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். பாதுஷா அவர்கள் மகாராணியின் கட்டுப்பாடுக்குள் இருக்கக் கூடாது என்றும் சுயமாக சாம்ராஜ்யத்தை ஆள வேண்டும் என்றும் சிறையில் இருக்கும் மூத்த மகன் குஸ்ரூவை விடுதலை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து கடிதம் எழுதினார். இந்த கடிதத்தை பாதுஷா படித்ததும் சற்று சிந்தனையில் ஆழ்ந்தது என்னவோ உண்மைதான். ஆனால் நூர்ஜகான் பேகத்தை பார்த்ததும் வந்த சிந்தனை மழுங்கிப் போனது. அவ்வளவு செல்வாக்கு மிக்க மகாராணிக்கு இந்த கடிதம் பற்றிய செய்தி தெரியாமல் இருக்குமா?? கடிதம் எழுதிய மகாபத் கான் உடனே ஆப்கானிஸ்தானுக்கு "பணியிட மாற்றம்'' செய்யப்பட்டார். தனக்கு வேண்டாதவர்களை தொலைவாக "டிரான்ஸ்பர்" செய்யும் பழக்கம் அப்பொழுதே இருந்தது.

                          கண்களைப் பறித்து, வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தாலும் மூத்த இளவரசர் குஸ்ரூவுக்கு அப்பொழுதும் நாட்டில் மிகுந்த செல்வாக்கு இருந்தது. அதனால் இளைய இளவரசர் ஷாஜகான் மனதில் நஞ்சு கலக்கப்பட்டது. தான் வேட்டையாட காட்டிற்கு செல்லும் பொழுது அண்ணனையும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். அங்கே காட்டில் விலங்குகள் வேட்டையாடப்பட்ட நேரத்தில் கூடாரத்தில் மனித வேட்டை நடந்தது. சில மர்ம நபர்கள் இளவரசர் குஸ்ரூவை கொலை செய்தனர். சில நாட்களில் கொலைகாரர்களும் ஒரு "விபத்தில்" இறந்தனர். இருக்கும் வரை தெரியாத மகனின் அருமை அவர் இறந்த பிறகு பாதுஷா ஜஹாங்கீருக்குப் புரிந்தது. 1618 - லேயே பாதுஷாவின் உடல்நிலை மோசமானது. ஒரு வேலை பாதுஷா இறந்து விட்டால், சுதந்திரமாக வீரத்துடன் உலாவரும் இளவரசர் ஷாஜகான் அரியணை ஏறினால், தன்னுடைய "அதிகாரம்" செல்லாது என்பதை உணர்ந்த நூர்ஜகான் பேகம், சற்று கலக்கம் அடைந்தார். 

                    தன் முதல் கணவர் மூலம் தனக்குப் பிறந்த மகளை பாதுஷா ஜஹாங்கீரின் கடைசி மகனான ஷாரியாருக்கு திருமணம் செய்து வைத்தார் மகாராணி நூர்ஜகான் பேகம். இந்த செய்தி ஷாஜகானுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. மேலும் ஆப்கானிஸ்தானில் படையோடு நுழைந்த பாரசீக மன்னரை எதிர்த்து போர் புரிய பாதுஷாவிடம் இருந்து ஆணை வந்தது. தனது அரியணை தன் கையை விட்டு நழுவுகிறது என்பதை ஷாஜகான் புரிந்து கொண்டு பாதுஷாவிற்கு எதிராகவே கலகம் செய்தார். அப்படியும் இப்படியும் ஆக சில ஆண்டுகள் கழிந்தது இதற்கிடையில் ஷாஜகானுக்கு தாரா மற்றும் ஒளரங்கசீப் என்ற இரு மகன்கள் பிறந்தனர். இறுதியில் தந்தையும் மகனும் சமாதானமாக சென்றனர். அதற்கு முதல் படியாக தனது இரு மகன்களையும் டெல்லி அரண்மனைக்கு முதலில் அனுப்பி வைத்தார் ஷாஜகான். பாதுஷா ஜஹாங்கீரின்  மூச்சுக்காற்று மெதுவாக அடங்க ஆரம்பித்தது. கணவரின் உயிரை காப்பாற்ற நூர்ஜஹான் பேகம் பல நாட்டு மருத்துவர்களை வரவழைத்து போராடினார் என்பது உண்மை. இருப்பினும் என்ன செய்வது? 22 ஆண்டுகள் டெல்லி அரியனையில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்த பாதுஷா தனது 36 வது வயதில், அமைதியாக உறங்கினார். அதுவும் நிரந்தரமாக.  


Comments

Popular posts from this blog

இந்தியாவின் கதை :அத்தியாயம் 8 - அடிமைகளின் சாம்ராஜ்யம்

Ways to reduce my Tax

UDYAM - Whether a boon or bane for MSMEs