இந்தியாவின் கதை- அத்தியாயம் 5 : டெல்லியும் இராஜபுத்திரர்களும்
டெல்லி....!!
இந்தியாவின் நெற்றிப் பகுதியை வசீகரமாக அலங்கரிக்கும் இந்த மங்கலப் பொட்டை அழிக்கப் பார்த்த வேற்று நாட்டவர்கள் தான் எத்தனை பேர்? அதற்காக எத்தனை எத்தனை முயற்சிகள்??! உலக சரித்திரத்தில் எத்தனையோ நகரங்கள் சுவடு இல்லாமல் அழிந்து மண்ணுக்குள் புதைந்து போய் இருக்கிறது. ஆனால் டெல்லியின் கதை வேறு. எந்த சக்தியாலும் இந்த நகரத்தை வீழ்த்த முடியவில்லை, வரலாற்றுப் பக்கங்களில் இருந்தும் முழுவதுமாக அகற்ற முடியவில்லை. மீண்டும் மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாக உயிர்பெற்று சிலிர்த்து எழுந்து நின்றது டெல்லி. ஆனால் கம்பீரமான இந்த மாநகரம் வரலாற்றுப் போக்கில் வாங்கிய கத்திக்குத்துகளும், தாங்கிய சோதனைகளும் நம்மை திகைக்க வைக்கின்றன.
இந்தியாவில் புராதான கதைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. டெல்லியின் கதையும் அதே புராதான கதைகளில் இருந்தே தொடங்குகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும் பாகப்பிரிவினை செய்யும் பொழுது பாண்டவர்களுக்கு யமுனை நதிக்கரையில் அமைந்திருந்த "காண்டவ பிரஸ்தம்" என்ற பொட்டல் காட்டைக் கொடுத்தார்கள். அதை அவர்கள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் துணையோடு "இந்திரப்பிரஸ்தம்" ஆக மாற்றினர். பிறகு மகாபாரதப் போரில் வெற்றி பெற்று தர்மர் 18 ஆண்டுகளும், அதன் பின் அவர்களது சந்ததியினர் ஆட்சி செய்தனர். அவர்களது வம்சத்தின் கடைசி மன்னர் பரிக்க்ஷித் மகாராஜா. அவரது ஆட்சி காலம் முடிவடைந்த ஆண்டின் விவரம் அதிகாரப்பூர்வமாக இல்லை. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன் நடந்த தொல்பொருள் ஆராய்ச்சியில் கி.மு. 1500 வருடங்களுக்கு முன் பயன்படுத்திய பொருட்கள் கிடைத்தன. பாண்டவர்களின் ஆட்சிக்குப் பிறகு டெல்லியில் என்ன நடந்தது என்று யாருக்கும் தெரியவில்லை. கி.மு. வில் இந்தியாவிற்கு வந்த மெகஸ்தனிஸ் மற்றும் யுவான் சுவாங் போன்ற புகழ்பெற்ற வேற்று நாட்டுப் பயணிகள் கூட டெல்லியைப் பற்றி ஏதும் தங்கள் எழுதிய விவரங்களில் குறிப்பிடவில்லை.
அதன் பிறகு "எழுதப்பட்ட" வரலாற்று அடிப்படையில், வட இந்தியாவை சூரிய குலம், சந்திர குலம் மற்றும் அக்னி குலம் என மூன்று குலங்களைச் சார்ந்த 36 வகை ராஜபுத்திரர்கள் ஆட்சி செய்தனர் என்றும் இதில் பிரதிகாரர்கள், பாலர்கள், தோமர்கள், சௌகான்கள் மற்றும் ரத்தோர்கள் முக்கியமானவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். யார் பெரியவர்கள்? என்பதற்காக இவர்களுக்குள் நடந்த போர்களிலேயே இவர்களது படை பலம் குறைந்தது. அண்டை நாடுகளுடன் சண்டை போடுவதிலேயே எல்லைப்புற பாதுகாப்பைக் கோட்டை விட்டனர். இதனாலேயே பின்னாளில் அன்னிய படையெடுப்புகளுக்கு ஆளாயினர். முதலில் தோமர்கள், பிரதிகாரர்களுக்கு வரி செலுத்தி வந்தனர். பிறகு அவர்களுடன் சண்டையிட்டு கி.பி. 736 ஆம் ஆண்டு தங்களுக்கான நாட்டை உருவாக்கி, தலைநகராக டெல்லியை அமைத்தனர். அப்போது அந்த ஊருக்கு வைக்கப்பட்ட பெயர் "தில்லிகா".
தோமர் இராஜபுத்திர வம்சத்தின் புகழ் பெற்ற மன்னன், ஆனங் பால் ஆவார். இன்று குதுப்மினார் உள்ள பகுதியில், லால்கோட் என்று வரலாற்றில் குறிப்பிடப்படும் பெரும் கோட்டையைக் கட்டினார். சுமார் கி. பி. 1000 லிருந்தே மங்கோலியர்களும், ஈரானியர்களும், ஆப்கானியர்களும், அரேபியர்களும் இந்திய எல்லையில் தொல்லைக் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். தோமர்கள் ஆட்சியமைத்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, சௌகான்கள் போரில் வெற்றிப் பெற்று டெல்லியைக் கைப்பற்றினர். சௌகான்களில், பிரித்திவிராஜ் சௌகான் புகழ்பெற்ற மன்னர். வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் திருமணம், வீரம், மானம், துரோகத்தால் வீழ்ந்தவர் என அனைத்திற்கும் சொந்தக் காரர் தான் இந்த கடைசி சௌகான் ஆன, பிரத்திவிராஜ் சௌகான்.
Comments